புதுடெல்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ்(82) நேற்று காலமானார். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது சொந்த ஊரில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆக. 22-ல் அனுமதிக்கப்பட்ட முலாயம் சிங்குக்கு, சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 8.16 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங், மூன்று முறை அம்மாநில முதல்வராகப் பதவி வகித்துள்ளார். மேலும், மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு 10 முறை, மக்களவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரது மறைவைத் தொடர்ந்து, உத்தர பிரதேச அரசு 3 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. பிஹார் அரசு ஒரு நாள் துக்கம் அறிவித்தது. லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
» “குஜராத்துக்குள் நுழைய ‘அர்பன் நக்சல்’கள் முயற்சி” - ஆம் ஆத்மி மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு
இந்நிலையில், முலாயம் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரான, எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைஃபைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று பிற்பகல் அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார், சந்திரசேகர ராவ் மற்றும் மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
தலைவர்கள் இரங்கல்
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், “பெரிய தலைவரான முலாயம் சிங் யாதவ், எளிய பின்னணியிலிருந்து வந்து, பெரும் புகழ் பெற்றவர். அசாதாரணத் திறன்களைக் கொண்டவர். அவரது மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு” என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று பரூச் நகரில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசும்போது, “முலாயம் சிங் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவருடன் எனக்கு சிறப்பான உறவு இருந்தது. 2014-ல் பிரதமர் வேட்பாளராக பாஜக என்னை அறிவித்தபோது, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நான் பேசினேன். அப்போது முலாயம் எனக்கு ஆசி வழங்கினார்.
அதேபோல, `முன்னேற்றப் பாதையில் தன்னுடன் அனைவரையும் அழைத்துச் செல்லும் மோடி, மீண்டும் பிரதமராக வருவார்' என்றும் அவர் கூறினார். இதைச் சொல்வதற்கு ஒருவருக்கு எத்தகைய பெரிய மனது வேண்டும்” என்றார்.
முன்னதாக, பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “1975-ல் அவசரநிலைக் காலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முக்கிய வீரராக முலாயம் சிங் திகழ்ந்தார். அவருடன் எனக்கு நெருங்கிய உறவு இருந்தது. அவரது கருத்துகளைக் கேட்க நான் எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் ஆழந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “முலாயம் சிங்குடன் நான் நீண்டகால நட்புறவில் இருந்தேன். ராமஜென்ம பூமி இயக்கத்தின்போது நான் அவருடன் பலமுறை கலந்துரையாடினேன். சித்தாந்த ரீதியில் நாங்கள் வேறுபட்டிருந்தாலும், பரஸ்பர மரியாதையைப் பகிர்ந்துகொண்டோம். அவரது மறைவு அரசியல் அரங்கில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது ஆழந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில் “முலாயம் சிங் யாதவ் மறைவுடன், சோஷலிச சிந்தனைகளின் குரல் மவுனமாகி விட்டது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், உத்தர பிரதேச முதல்வராகவும் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கான அவரது போராட்டம் என்றென்றும் நினைவில் இருக்கும். நாட்டின் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போதெல்லாம், காங்கிரஸுக்கு அவரது ஆதரவு கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், முலாயம் சிங்கின் மகனும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்தார்.
முலாயம் சிங் உடலுக்குக் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்த உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "சிறந்த தலைவரான முலாயம் சிங் மறைவு, நாட்டில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், "இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்காகப் போராடிய உயர்ந்த தலைவர்களுள் ஒருவரான முலாயம் சிங், மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், திக தலைவர் கி.வீரமணி, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள் ளிட்டோரும் இரங்கல் தெரிவித் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago