கேரளா | அனந்த பத்மநாப சுவாமி கோயில் ‘சைவ’ முதலை பாபியா உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

காசர்கோடு: கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வாழ்ந்து வந்த கோயில் முதலையான ‘பாபியா’ ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.அதற்கு வயது 75. இந்த முதலை கோயிலில் வழங்கப்பட்ட சைவ பிரசாதத்தை உண்டு உயிர் வாழ்ந்ததால் மிகவும் புகழ் பெற்றிருந்தது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரா என்ற கிராமத்தில் ஒரு குளத்திற்கு நடுவில் அமைந்துள்ளது அனந்த பத்மாநாப சுவாமி கோயில். இது திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்கு மூலவர் என்று கருதப்படுகிறது. இந்தக் கோயில் குளத்தில் முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. பாபியா என்று அழைக்கப்பட்ட அந்த முதலை இந்தக் கோயிலை பாதுகாக்க கடவுளால் அனுப்பப்பட்டது என்றும், அது கடவுளின் தூதுவன் என்றும் நம்பப்பட்டு வந்தது.

ஒருமுறை குளத்தில் இருந்து கோயில் வளாகத்திற்குள் வந்த முதலையை குருக்கள் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட அந்தப் படம் அதிக அளவில் பகிரப்பட்டது.

பொதுவாக முதலைகள் ஊன் உண்ணிகள். ஆனால், அனந்த பத்மநாப சுவாமி கோயில் முதலையான ‘பாபியா’ தனது சைவம் சாப்பிடும் குணத்திற்காக பெரிதும் மதிக்கப்பட்டது. அனந்த பத்நாப சுவாமி கோயிலுக்கு பாபியா எப்படி வந்தது, அதற்கு யார் பெயர்வைத்தது என்பது குறித்து யாருக்கும் தெளிவாக தெரியவில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்து வந்த முதலை பாபியா யாரையும் இதுவரை தாக்கியதில்லை என்று கூறப்படுகிறது.

கோயிலின் குருக்கள் பாபியாவிற்கு ஒரு நாளைக்கு காலை, மதியம் என இரண்டு முறை உணவிடுவார். உணவிடும் நேரம் கோயில் பிரசாத சோற்றை உருண்டையாக உருட்டி குருக்கள் அதன் வாயருகில் வைப்பார். அது அதனைச் சாப்பிட்டுவிடும். பாபியாவிற்கும் குருக்களுக்கும் இடையில் அப்படி ஓர் உறவு இருந்தது. கோயில் குளத்தில் அதிகமான அளவு மீன்கள் இருந்தும் பாபியா அவற்றை தாக்கியதோ சாப்பிட்டதோ இல்லை என்று கூறப்படுகிறது. ‘அது பண்டைய கால கோயில் மரபுப்படி உள்ள முற்றிலும் சைவ முதலை இது’ என்று கோயில் பணியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படும் பாபியா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. அதற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வன உயிர் நிபுணர்கள் கூறுகையில், “பாபியா மக்கர் வகை முதலை. கோயில் நிர்வாகம் அளித்துவந்த பிரசாதம் அதற்கு துணை உணவாகவே இருந்து வந்துள்ளது. காட்டில் இந்த வகை முதலைகளின் முக்கிய உணவு மீன்கள். சில நேரங்களில் சிறிய, பெரிய பாலுட்டிகளையும் வேட்டையாடும்” என்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE