அமெரிக்காவை விட உ.பி. சாலைகள் மேம்படும்: அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

By செய்திப்பிரிவு

லக்னோ: இந்திய சாலைகள் மாநாட்டின் 81-வது ஆண்டுக் கூட்டம் உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது.

வரும் 2024-ம் ஆண்டுக்கு முன்னதாகவே அமெரிக்காவை காட்டிலும் உத்தர பிரதேசத்தின் சாலைகள் தரம்மிக்கதாக மாறும். இதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரும் நாட்களில் உத்தர பிரதேச மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. அதற்கான முன்னோட்டமாகவே ரூ.8,000கோடி மதிப்பிலான திட்டங்கள் இந்த மாநிலத்துக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி அரசிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. அவற்றுள் ஒன்றாக மாநில நகர்ப்புற போக்குவரத்துக் கழகம் மின்சார இரட்டை அடுக்கு ஏசி பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது.

கார்பன் புகை வெளியீட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் குறைக்க வேண்டும் என யோகி அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு, டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டிலிருந்து படிப்படியாக வெளியேறுவதை உ.பி. அரசு உறுதி செய்ய வேண்டும்.

முதலீடுகளை ஈர்ப்பதற்கு, தரமான சாலைகள், சுத்தமான குடிநீர், இடைவிடாத மின்சார விநியோகம் கிடைக்கச் செய்வது அவசியம். இவ்வாறு கட்கரி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE