அடுத்த தலைவராகும் மல்லிகார்ஜூன கார்கே - சரிவில் இருந்து காங்கிரஸ் மீண்டெழ ‘தலித் அரசியல்' கைகொடுக்குமா?

By இரா.வினோத்

பெங்களூரு: நாட்டின் பழமையான கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் முன் எப்போதும் இல்லாத அளவுக்குசரிவில் இருக்கிறது. நாடும், கட்சியும் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கும் இத்தருணத்தில், நிரந்தர தலைவர் இல்லாத நிலை நீண்ட காலமாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.

தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக் விஜய் சிங், சசி தரூர், கே.என். திரிபாதி ஆகியோர் காய் நகர்த்திய நிலையில், கடைசியாக களமிறங்கினார் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (80). 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருக்கும் அவருக்கு சோனியா காந்தி குடும்பத்தின் மறைமுக ஆதரவும், அதிருப்தி ஜி 23 தலைவர்களின் நேரடி ஆதரவும் இருப்பதால் அசோக் கெலாட்டும், திக் விஜய் சிங்கும் போட்டியில் இருந்து விலகினார்கள். மல்லிகார்ஜூன கார்கேவின் வெற்றி உறுதி என்பதால், தான் வகித்த மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

அம்பேத்கரின் வாரிசு: மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள வரவட்டி கிராமத்தில் 1942-ல் பிறந்தார். பீதரில் நடந்த மதக் கலவரத்தால் வீட்டை இழந்த கார்கே, 7 வயதில் குல்பர்காவுக்கு புலம்பெயர்ந்தார். கார்கேவின் தந்தை, அம்பேத்கரின் மப்பண்ணா தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தார். இதனால் சிறுவயதிலே அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்ற கார்கே,1956-ல் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது இவரும் குடும்பத்தினருடன் பவுத்தம் தழுவினார்.

குல்பர்கா அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், சேத் சங்கர்லால் லஹொட்டி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பில் இணைந்தார். படிப்பை முடித்த கார்கே, பின்னாளில் உச்சநீதி மன்ற நீதிபதியான சிவராஜ் பாட்டீலிடம் உதவி வழக்கறிஞராக இணைந்தார். குல்பர்கா மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் திறம்பட வாதாடியதால் கார்கேவுக்கு தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டது.

தோல்வியை தழுவாத சர்தார்: 1969-ல் காங்கிரஸில் இணைந்த மல்லிகார்ஜூன கார்கே, அதே ஆண்டில் நடந்த குல்பர்கா நகர பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதைத் தொடர்ந்து 1972-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கார்கேவை தேடி வந்தது. 1972-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த 9 சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றார். இதனால் ‘தோல்வியை தழுவாத சர்தார்’ என கொண்டாடப்பட்டார்.

கார்கேவுக்கு 1976-ம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைத்தது. தொடர்ந்து குண்டுராவ், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா, தரம் சிங் ஆகியோரின் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தார். கார்கே உள்ளாட்சி அமைச்சராக இருந்த போது லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தார். நிலமற்ற பட்டியலின, பிற்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதற்காக 400-க்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்களை அமைத்திருக்கிறார்.

4 முறை நழுவிய முதல்வர் பதவி: 40 ஆண்டுகள் எம்எல்ஏவாக வலம் வந்த மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவில் உள்ளாட்சியில் தொடங்கி உள்துறை வரை கர்நாடகாவில் கவனிக்காத துறையே இல்லை எனலாம். எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்ட கார்கேவுக்கு 1999, 2004, 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகாவின் முதல்வராகும் வாய்ப்பு உருவானது. அவர் பட்டியலினத்த‌வர் என்பதால் 4 முறையும் முதல்வர் நாற்காலி கிடைக்காமல் போனது. ‘தலித் என்பதற்காக முதல்வர் பதவி வழங்கினால் ஏற்க மாட்டேன்' என கார்கே அறிவித்தார்.

தேசிய அரசியல்: 2008-ம் ஆண்டுக்கு பின் தேசிய அரசியலுக்கு நகர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே துறை,தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் அமைச்சராகப் பதவி வகித்தார். எவ்வித ஊழல் புகாரிலும் சிக்காத அமைச்சராக வலம் வந்ததால் கார்கேவுக்கு சோனியா, ராகுல் காந்தி மத்தியில் நன்மதிப்பு கிடைத்தது.

2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக அவர் தோல்வியை சந்தித்த போதும், சோனியாகாந்தி அவரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார். காங்கிரஸ் கடும் சவாலை சந்திக்கும் காலகட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மக்களவை மற்றும் மாநிலங்க‌ளவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புகளையும் வழங்கினார்.

இந்த காலகட்டத்தில் இந்துத்துவ எதிர்ப்பு, மதச்சார்பின்மை, கருத்துரிமை ஆகியவற்றுக்காக நாடாளுமன்றத்தில் தீர்க்கமாக குரல் கொடுத்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் மோடி புயலில் சிக்கிய போதும், மல்லிகார்ஜூன கார்கே தனி ஆளாக உறுதியாக நின்றார். பகிரங்கமாகவே தன்னை ஒரு அம்பேத்கரியராகவும், பவுத்தராகவும் அறிவித்துக்கொண்டு காங்கிரஸின் சித்தாந்த முகமாக மாறினார். இதனாலே காங்கிரஸின் அடுத்த தலைவராகும் தகுதி கார்கேவுக்கு இருப்பதாக ராகுல் காந்தி தீர்மானித்திருக்கிறார்.

காங்கிரஸின் கணக்கு: அரசியலில் 60 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மல்லிகார்ஜூன கார்கே மீது பெரிதாக ஊழல் புகாரும், குற்றப் பின்னணி வழக்குகளும் இல்லை. காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான இவருக்கு 4 முறை முதல்வர் பதவி கிடைக்காத போதும், ஒருமுறை கூட‌ கட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது கிடையாது. பாஜக அரசின் அழுத்தங்களுக்கு அஞ்சாமல் மதவாத அரசியல் எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். அதேநேரம் எளிமையும் நேர்மையும் நிறைந்த பழைய காங்கிரஸாரின் முகம் இருப்பதால் எதிர்க்கட்சியினர் மத்தியிலும் இவருக்கு நல்ல மரியாதை. இதனாலேயே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

கர்நாடகாவில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த மாநிலத்தை சேர்ந்த கார்கேவை தலைவர் ஆக்கினால் காங்கிரஸூக்கு நல்ல பலன் கிடைக்கும். அதேபோல தலித் ஒருவருக்கு தலைவர் ப‌தவி கொடுத்தால் தேசிய அளவிலும் காங்கிரஸூக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். ம‌ல்லிகார்ஜூன கார்கே தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதால் தென் மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கும் அதிகரிக்கும். மேற்கூறிய இந்த காரணிகள் எல்லாம் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு கைகொடுக்கும் என வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்