ராமர், சீதா, ஹனுமன், ராவணனை தவறாக சித்தரித்ததாக புகார் - ‘ஆதி புருஷ்’ படத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் டீஸர் அக்டோபர் 2-ல் வெளி யான பிறகு அப்படத்துக்கு இந்து அமைப்பினரும் பாஜக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ராமர், சீதை, ஹனுமன் மற்றும் ராவணனை தவறாக சித்தரித்திருப்பதாக அவர்கள் கண்டித்துள்ளனர்.

பாகுபலி திரைப்படப் புகழ் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக உள்ள புராண காவியம் ‘ஆதி புருஷ்’. இத்திரைப்படத்தின் டீஸர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வெளியிடப்பட்டது. இந்த 1.46 நிமிட டீஸர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அதேசமயம் இதில் வெளியான காட்சிகளில் ராமர், சீதை, ஹனுமன் மற்றும் ராவணன் சித்தரிக்கப்பட்ட விதம், இந்துத்துவா மற்றும் பாஜக தலைவர்களை அதிருப்தி அடையச் செய்தது. ஆட்சேபனைக்குரிய காட்சிகளை அகற்றாமல் படத்தை வெளியிட முடியாது எனக் கூறி ஆதி புருஷின் இயக்குநர் ஓம் ராவத்துக்கு கண்டனக் கடிதங்கள் குவியத் தொடங்கியுள்ளன.

இவர்களில் முதல் எதிர்ப்பாளராக பாஜக ஆளும் மத்தியபிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, “நமது புனிதப் புருஷர்கள் இத்திரைப்படத்தில் அவமதிக்கப்பட்டுள்ளனர். ராமரும், ஹனுமரும் தோல் உடைகளில் காட்டப்பட்டுள்ளனர். சீதா மாதாவுக்கு கைகள் மறைக்காத ‘ஸ்லீவ்லெஸ்’ உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்து மதத்தை குறி வைத்து அவமதித்துள்ளனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. எனவே, ஆட்சேபனைக்குரிய காட்சிகளை அகற்றாமல் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

உ.பி. துணை முதல்வர்களான கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பாதக் ஆகியோரும் இதனை கண்டித்துள்ளனர். இந்து மதமும் அதன் கலாச்சாரமும் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர்பெற்ற பாஜக எம்.பி., துறவி சாக்ஷி மகராஜும் ஆதி புருஷ் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உ.பி.யின் உன்னாவ் தொகுதி எம்.பி.யான சாக்ஷி மகராஜ் இதுகுறித்து கூறும்போது, “ராவணனாக நடித்துள்ள சைபி அலி கானை பார்த்தால் முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜியை போல் தோற்றமளிக்கிறார். மேலும் பல காட்சிகளில் இந்து கலாச்சாரம் விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்ட இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகரான துறவி சத்யேந்தர் தாஸும், ஆதி புருஷ் திரைப்படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புனிதர்களை அவமதித்து சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் திரைப்படத்தை வெற்றி அடையச் செய்யும் உத்தியாக இது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் திரைப்படத்துக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். ம.பி., உ.பி. மட்டுமின்றி இதர மாநிலங்களிலும் ஆதி புருஷ் திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. மகாராஷ்டிராவில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனாவுக்கு ஆதரவளிக்கும் பாஜகவின் மூத்த தலைவர் ராம் கதம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்