பிஹார் | சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியிடம் கடுமையாக பேசிய ஆட்சியர்: வலுக்கும் கண்டனம்

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் அரசிடம் சானிட்டரி நாப்கின் கேட்ட பள்ளி மாணவியிடம் கடுமையாக பேசிய மாவட்ட ஆட்சியருக்கு கண்டனங்கள் வலுத்ததைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிஹாரின் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில், மாவட்ட ஆட்சியரான ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். அவரிடம் பள்ளி மாணவி ஒருவர், “அரசு எங்களுக்கு குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத், “அரசு சார்பில் ஏற்கெனவே சீருடைகள், உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இனி நீங்கள் ஜீன்ஸ் வேண்டும் என கேட்பீர்கள், கருத்தடை உபகரணங்கள் கூட கேட்பீர்கள்” என்று பதிலளித்தார்.

இந்த நிலையில் ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்த மாணவி ரியா குமார் ஊடகங்களிடம் கூறும்போது, “என்னுடைய கேள்வியில் எந்த தவறும் இல்லை. இது பெரிய விஷயம் இல்லை. என்னால் சானிட்டரி நாப்கின் வாங்க முடியும். ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மாணவிகளால் வாங்க முடியாது. அவர்கள் சார்பாகத்தான் இந்த கோரிக்கை வைத்தேன்” என்று தெரிவித்தார்.

இவ்விவகாரம் பூதாகாரமாக வெடித்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தன்னுடைய கருத்து பெண்களை புண்படுத்தி இருந்தால் மன்னிகவும் என்று ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE