ஜூலை 1-ம் தேதி முதல் அமல் | மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - 48 லட்சம் பேர் பயனடைவர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியர்களுக்கு 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலுவைத் தொகை (அரியர்ஸ்), அடுத்த சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். ஓராண்டு காலத்தில் இது 3-வது அகவிலைப்படி உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு, 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியர்களுக்கு பண்டிகைக்கால மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும். கரோனா தொற்று காரணமாக, கடந்த 2020 ஜனவரி 1, ஜூலை 1 மற்றும் 2021 ஜனவரி 1-ம் தேதிகளைக் கணக்கிட்டு வழங்க வேண்டிய அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. ஏறத்தாழ ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் இதன் விகிதம் கடந்த ஆண்டு ஜூலையில் 11 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்ந்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு அக்டோபரில் அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டதால் 31 சதவீதமானது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5,591.36 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் கடந்த ஜூலையிலிருந்து கணக்கிட்டால் ரூ.4,394.24 கோடி கூடுதலாக செலவாகும்.

ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள அகவிலை நிவாரணம் உயர்வால், ஆண்டுக்கு கூடுதலாக ரூ.6,261.20 கோடி செலவாகும். இந்த நிதியாண்டில் கடந்த ஜூலையிலிருந்து கணக்கிட்டால் ரூ.4,174.12 கோடி கூடுதலாக செல வாகும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் என இரண்டுக்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.12,852.56 கோடி செலவாகும். 2022-23 நிதியாண்டில் ஜூலை முதல் ரூ.8,568.36 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு ஏன்?

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஜனவரி 1, ஜூலை 1-ம் தேதிகளைக் கணக்கிட்டு அமல்படுத்தப்படும். சில்லறைப் பணவீக்கம் மற்றும் நுகர்வோர் விலை குறையீடு ஆகியவை ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி இலக்கைவிட 2 முதல் 6 சதவீதம் உயர்ந்தது. இதனால் கூடுதல் அகவிலைப்படி உயர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு உயரும்?

ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்கள் அடிப்படைச் சம்பளமாக ரூ.18,000 வாங்கினால், அவர்களுக்கு அகவிலைப்படி ரூ.720 உயரும். அடிப்படைச் சம்பளம் ரூ.25 ஆயிரமாக இருந்தால் அகவிலைப்படி ரூ.1,000 உயரும். அடிப்படைச் சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தால் அகவிலைப்படி ரூ.4,000 உயரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்