உத்தராகண்ட்டில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷில் சொகுசு விடுதி உள்ளது. இந்த சொகுசு விடுதியில் அங்கிதா பண்டாரி என்ற பெண் வரவேற்பாளரை புல்கிட் மற்றும் சொகுசு விடுதி மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் கொலை செய்து அருகில் உள்ள ஓடையில் வீசியதாக கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த கொலை சம்பவம் அங்கிதாவின் சமூக வலைதள நண்பர் ஒருவரின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பத்திரமாக உள்ளதாகவும், அதை அழிக்க எந்த முயற்சியும் நடக்காது எனவும் உறுதியளித்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தமி கொலையான அங்கிதாகுடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவியை அறிவித்தார்.

மேலும், இந்த கொலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எனவும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE