திருமலையில் ரூ.23 கோடியில் புதிய பரகாமணி கட்டிடம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்

By என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தற்போது திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாளான்று, சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். பின்னர், இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை மீண்டும் சுவாமியை தரிசனம் செய்தார். நேற்று காலை, திருமலையில் ரூ.23 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பரகாமணி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.

தற்போது உண்டியல் காணிக்கை கோயிலுக்குள் எண்ணப்பட்டு வருகிறது. இதற்கென்று, கோயிலுக்கு வெளியே தனியாககட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்குநவீன சில்லறை எண்ணும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் எண்ணுவதை வெளியில் இருந்து பக்தர்கள் காணும்வகையில் சுற்றிலும் கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி, ரோஜா மற்றும் எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மலையப்பர் வீதியுலா

பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை உற்சவரான மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளிலிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முதல் நாள் இரவு 7 தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவியுடன் எழுந்தருளிய மலையப்பர், தற்போது 2-ம் நாள் காலை 5 தலை நாகத்தின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முதல் நாள் ஆதிசேஷன் மீதும், 2-ம் நாள் வாசுகி மீதும் உலா வந்து கம்பீரமாக காட்சியளித்தார் மலையப்பர். இவரை கண்டதும், பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டு வழிபட்டனர்.

2 ஆண்டுகள் கழித்து வாகன சேவையை காணும் பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். ஆதலால், 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் நிரம்பி இருந்தனர். வாகன சேவையின் முன்பாக குதிரை, காளை, யானை ஆகிய பரிவட்டங்கள் செல்ல, ஜீயர் சுவாமியின் குழுவினர் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடியபடி சென்றனர்.

இவர்களை பின் தொடந்து தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட பல மாநில நடன கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உட்பட பல வேடங்கள் தரித்து நடனமாடியபடி சென்றனர். இதனால் மாட வீதி முழுவதும் இந்த பிரம்மாண்ட விழா பக்தர்களை உற்சாகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து, இரவு ஹம்ச (அன்ன) வாகனத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதமாய் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை நடந்த வாகன சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE