எம்.எச்.17 விசாரணைக்கு இந்தியா உதவும்: மலேசிய பிரதமருக்கு மோடி உறுதி

By செய்திப்பிரிவு

உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான முழுமையான விசாரணைக்கு இந்தியா உதவும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்-கிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த வியாழக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர்.

மலேசிய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது யார் என்பதற்கான எந்த ஆதாரமும் இன்னும் கிடைக்கவில்லை. உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றொருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதில் ஒரு திருப்பமாக, விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய குழுவினர்தான் என்றும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் உளவுத் துறை தலைவர் விடாலி நாடா கூறும்போது, "கிளர்ச்சியாளர்களுக்கு விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு பயிற்சி கிடையாது. தொழில்நுட்பத் திறன் வாய்ந்த ரஷ்ய குழுவினர்தான் ஏவுகணையை செலுத்தி விமானத்தை வீழ்த்தியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றை தொகுத்து வருகிறோம்" என்றார்.

உக்ரைனின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்ய அரசு, விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்தான், அந்த உண்மையை மறைக்க தமது நாட்டின் மீது அபாண்டமாக பழிசுமத்துகிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்-குக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில், எம்.எச்.17 விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற அவர், மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று மலேசிய பிரதமரிடம் மோடி உறுதியளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE