சென்னை - டெல்லி அம்மா எக்ஸ்பிரஸ்: மக்களவையில் அதிமுக கோரிக்கை

சென்னையிலிருந்து டெல்லிக்கு 'அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் புதிய ரயில் இயக்கவேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, “மும்பைக்கு அடுத்தபடியாக சென்னைக்கு புல்லட் ரயில் இயக்கவேண்டும். தமிழக முதல்வரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சென்னை எம்.ஆர்.டி.எஸ். பறக்கும் ரயில் போக்குவரத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். சென்னை திரிசூலம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். ஸ்ரீராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரத்துக்கு ரயில்பாதை அமைக்கவேண்டும். மேலும் இப்பாதையை பெங்களூர் பாதையுடன் இணைக்க வேண்டும். சென்னையிலிருந்து டெல்லிக்கு 'அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் புதிய ரயில் இயக்கவேண்டும்” என்றார்.

மற்றொரு அதிமுக உறுப்பினர் சி.கோபால கிருஷ்ணன் (நீலகிரி) பேசும் போது, “சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்தே 24 பெட்டிகளுடன் புறப்படவேண்டும், சேரன் எக்ஸ்பிரஸ், கோவை - மங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை - திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ஆகியவை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படவேண்டும். மேட்டுப்பாளையம் - பெங்களூர் இடையே புதிய ரயிலை இயக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE