பஞ்சாப் மாநிலம் பதிண்டா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘பணமதிப்பு நீக்க’ நடவடிக்கை பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். அதை, ‘கறுப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான போர்’ என்று வர்ணித்தார். 1966-ல் தான் இந்திரா காந்தி நாட்டின் பிரதமர் ஆனார். இந்தியாவை ‘சோஷலிச நாடாக’உருவாக்கும் பணியைத் தொடங்கினார். பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு பஞ்சமும் பட்டினியும் நிறைந்த பொருளாதாரத்தைச் சீர்படுத்த வேண்டிய கடமை அவருக்கு ஏற்பட்டது. ரேஷன் முறை அப்போதுதான் அமலுக்கு வரத் தொடங்கியது.
கப்பலில் கோதுமை வந்து இறங்கினால்தான் வயிறு நிறையும் என்ற நிலையைப் புரிந்து வைத்திருந்த மக்கள், ஏதும் பேசாமல் அந்த ரேஷனை ஏற்றுக்கொண்டனர். ஓரிரு ஆண்டுகளுக்குள் அது மோசமான நிலைக்குச் சென்றது. திருமணங்களில் எவ்வளவு மைதா, கோதுமை மாவு பயன்படுத்தவேண்டும் என்று தீர்மானித்து அதற்கு அனுமதி தரும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தரப்பட்டது. பிறகு கெரசின் (மண்ணெண்ணெய்), சிமென்ட் போன்றவையும் ரேஷன் பட்டியலில் சேர்ந்தது.
இப்போது மத்திய அரசில் செயலாளர், கூடுதல் செயலாளர் பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய ஆட்சிப் பணியை இப்படி ரேஷன் கோட்டாக்களை வழங்குவதில்தான் தொடங்கியிருப்பார்கள். பாஜக என்ற கட்சியின் முன்னோடியான ஜனசங்கம் அந்தக் காலத்தில், “இந்திரா தேரே ஷாசன் மே, கூடா பிக் கயா ரேஷன் மே” என்று கோஷமிட்டது. “இந்திரா அவர்களே, உங்களுடைய ஆட்சியில் குப்பை கூட ரேஷனில்தான் விற்கப்படுகிறது” என்று கேலி செய்தது அந்த கோஷம்.
இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அஞ்சாமல் சமத்துவ சமுதாயத்தை நோக்கிய பீடு நடை தொடர்ந்தது. 1970-ல் பருத்தித் துணி, பள்ளிக்கூட நோட்டுப் புத்தகங்கள் கூட ரேஷனில் விற்கப்பட்டன. அதிகாரிகள் கைகளில் மேலும் மேலும் அதிகாரங்கள் குவிந்தன. சோஷலிஸ்ட் அரசு, ஒரு திருமணத்துக்கு 25 விருந்தினர்களுக்கு மேல் அழைக்கக்கூடாது என்று விருந்தாளிகள் கட்டுப்பாட்டு ஆணையை இயற்றியது!
அதையெல்லாம் யாரும் அந்தக் காலத்தில் மதிக்கவே இல்லை என்பது வேறு. பிறகு அதிகாரிகள் ரோஷமடைந்து ஆய்வாளர்களை நியமித்தார்கள். அவர்கள் 25-க்கு மேல் எத்தனை விருந்தாளிகளோ அந்த எண்ணிக்கைக்கேற்ப அபராதம் விதித்தார்கள், கோடைக் காலத்தில் பாலுக்குத் தட்டுப்பாடு என்பதால் பாலைக் கொண்டு தயாரி்க்கும் பன்னீர், பர்ஃபி, ரசகுல்லா, குலாப் ஜாமூன்களுக்குத் திருமணங்களில் தடையே விதித்தார்கள்!
ஏழைகளுக்கும் - பணக்காரர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் - மக்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்போம் என்பதுதான் சோஷலிஸ்ட் அரசின் வாக்குறுதி. முடிவு என்னவோ நேரெதிராக அமைந்தது. பணக்காரர்கள் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள், அதிகாரிகளுக்குத் தேவைப்பட்டதைக் கொடுத்து ‘தனி வழி’ கண்டார்கள். பதிண்டாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, ஒரு பீரங்கி வைத்துக் கொள்ள தனக்கு உரிமம் வேண்டும் என்று ஆட்சியருக்கு விண்ணப்பித்தார்.
‘பீரங்கி எதற்கய்யா உனக்கு?’ என்று ஆட்சியர் கேட்டார். ‘ஐயா, என் மகளுடைய திருமணத்துக்கு 5 குவிண்டால் சர்க்கரை வேண்டும் என்று விண்ணப்பித்தேன், அதை வெகுவாகக் குறைத்து 25 கிலோதான் கொடுத்தீர்கள். எனக்கு தற்காப்புக்கு ஒரு பிஸ்டல் வேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைக் கேட்டால் கிடைக்குமோ கிடைக்காதோ என்றுதான் பீரங்கி கேட்டேன்’ என்றார் அந்த விவசாயி!
அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட இந்தி திரைப்படங்களில் வில்லன் பதுக்கல்காரராக, கள்ளச் சந்தைப் பேர்வழியாக, கொள்ளை லாபம் சம்பாதிப்பவராக, கொலை செய்கிறவராக, கற்பழிப்பவராக ஏன், அரசியல்வாதியாகக் கூட சித்தரிக்கப்படுவார்! ஆனால் எப்போதும் அதிகாரியை வில்லனாகக் காட்டமாட்டார்கள். பல ஆண்டுகளாக ரேஷனைக் கடைப்பிடித்ததால் அரசு அதிகாரிகள் நம்மைவிட பல மடங்கு செல்வாக் குள்ள தனி வர்க்கமாகவே மாறிவிட்டார்கள். அவர்களிடையே ஊழலும் கறுப்புப் பணமும் பல மடங்காகப் பெருகிவிட்டன.
சோஷலிசத்துக்காக என்று சொல்லி ஏற்படுத்தப்பட்ட அமைப்பே நம்மை நாசப்படுத்திவிட்டது. ‘வறுமையே வெளியேறு’என்று கூவிய 1971-83 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் மக்கள் சிறிதுகூட அதிலிருந்து மீளவில்லை. இருந்தும் நாம் அந்தக் காலத்தைப் பற்றி பெருமிதத்தோடு நினைவு கூர்வதுடன் நில்லாமல், நமக்கு வாய்த்த தலைவர்களிலேயே இந்திரா காந்திதான் தன்னிகரில்லாதவர் என்று பூரிக்கிறோம்.
கூகுள் பயன்பாட்டுக்குப் பிறகு வந்த தலைமுறைக்கு இதெல்லாம் தெரியாது, அவர்களுடைய பெற்றோருக்கு லேசாக நினைவிருக்கும், நம்முடைய அதிகாரிகளுக்கும்தான். அதனால்தான் எதற்காவது கட்டுப்பாடு, ரேஷன் என்றாலே அவர்களுக்கு நாவில் எச்சில் ஊற்றெடுக்கிறது. பழைய சோஷலிஸ்ட் அரசின் கட்டுப்பாட்டு அரசைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற துடிப்பு மேலிடுகிறது. பண மதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பு வெளியான பிறகு, பழைய நிர்வாக நடைமுறைகளை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்துவிட்டார்கள். முதலில் ஒரு நபருக்கு 4,000 ரூபாய், அடையாள அட்டை வேண்டும் என்றார்கள்.
பிறகு அழியாத மை என்றார்கள். பணத்தை 4,000-த்தில் இருந்து பாதியாகக் குறைத்துவிட்டார்கள். இருந்தும் பணத்தை எடுக்க முடியவில்லை. ‘டிசம்பர் 30 வரை தொடரும்’என்று அரசும் ரிசர்வ் வங்கியும் சேர்ந்து அறிவித்தாயிற்று. ஒரு திருமணச் செலவுக்கு அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் போதும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். யார் இவர்கள்? முன்னர் திருமணத்துக்கு மாவு, சர்க்கரையெல்லாம் அளந்து கொடுத்தார்களே அவர்களே தான். நவம்பர் 8-க்குப் பிறகு மோடி அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும், இந்திரா காந்தியின் சோஷலிச அரசு காலத்தில் எடுத்து, பிறகு கைவிடப்பட்ட முடிவுகள்தான்.
பழைய பாஸ்போர்ட் யாரிடமாவது இருந்தால் எடுத்து சோதித்துப் பாருங்கள். நரசிம்ம ராவ் மன்மோகன் சிங் இரட்டையர்கள் தாராளமயத்தைக் கொண்டுவரும் வரையில் - அதுதான் அமலில் இருந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் எவ்வளவு டாலர்கள் வெளிநாட்டுச் செலவுக்கு அனுமதிக்கப்பட்டது, நாடு திரும்பிய பிறகு ஒப்படைத்தது எவ்வளவு என்றெல்லாம் கிறுக்கியிருப்பார்கள். இந்தியாவில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பது குறித்து நமக்குச் சந்தேகம் ஏதுமில்லை; அதை, அதே பழைய அதிகார வர்க்கத்தைக் கொண்டு, அதே சோஷலிஸ்ட் அரசு கடைப்பிடித்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து மாற்றிவிட முடியுமா என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago