நீதிபதி கட்ஜு அதிர்ச்சி புகார்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி - மாநிலங்களவை 2 முறை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

பிரஸ் கவுன்சில் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு நீதித் துறை மீது கூறிய புகார் மக்களவை, மாநிலங்களவையில் திங்கள்கிழமை எதிரொலித்தது. இதுதொடர்பாக மாநிலங்கள வையில் அதிமுக உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பியதால் இரண்டு முறை அவை ஒத்திவைக் கப்பட்டது.

மாநிலங்களவை திங்கள் கிழமை கூடியதும் மிசோரம் மாநிலத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரொனால்டு சப்பா பதவி ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று நீதிபதி கட்ஜு கூறிய புகார் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரினர். இது தொடர்பான ஆங்கில நாளிதழ் செய்தியையும் அவர்கள் காண்பித்தனர்.

அப்போது மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி குறுக்கிட்டு, ‘அவையில் நாளி தழைக் காட்டக் கூடாது’ எனக் கண்டித்தார்.

திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு

அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பேசும்போது, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு நீதிபதி கட்ஜு கூறிய புகார் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் கனிமொழி, தங்கவேல் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருகட்சிகளின் உறுப்பினர்களும் கோஷமிட்டதால் அவையில் கடும் அமளி நிலவியது.

அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் இருக்கையில் அமரும்படி சபாநாயகர் ஹமீது அன்சாரி கேட்டுக் கொண்டார். அதை ஏற்காமல் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். அமளி அதிகமானதால் அவை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோது பேசிய அன்சாரி ‘சில உறுப்பினர்கள் விதிகளுக்கு முரணாக பிரச்சினையை எழுப்ப முயன்றதால் அவையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று.’ எனத் தெரிவித்தார்.

அவையில் மன்மோகன் சிங்

கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்க வேண்டும் என மைத்ரேயன் வலியுறுத்தினார். அப்போது அவையில் அமர்ந்திருந்த மன்மோகன் சிங் அமைதியாக இருந்தார். எனினும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் திமுக உறுப்பினர்கள் எழுந்துநின்று அதிமுகவினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இருதரப்பினரையும் சமாதானப் படுத்த முயன்ற அன்சாரியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து நிலவிய அமளியால் மாநிலங்களவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அன்சாரி அறிவித்தார். அப்போது திமுகவின் மற்ற இரு உறுப்பினர்களான திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம் அவையில் இல்லை.

மக்களவையிலும் பிரச்சினை

நீதிபதி கட்ஜுவின் புகார் விவகாரத்தை மக்களவையிலும் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பினர். மக்களவையில் திமுகவுக்கு உறுப்பினர்கள் இல்லாததால் அங்கு அமளி ஏற்படவில்லை.

கட்ஜுவின் புகார் குறித்துப் பேசிய மக்களவை அதிமுக தலைவர் தம்பிதுரை, இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் எனக் கோரினார்.

கட்ஜு புகார் விவகாரம்

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான கட்ஜு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இணையதள பக்கத்தில் நீதித் துறை மீது ஒரு புகாரை எழுப்பியிருந்தார்.

கடந்த 2004-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் இருந்தபோது, பல ஊழல் புகார்களில் சிக்கிய ஒரு நீதிபதியின் பதவி உயர்வுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சி அன்றைய மத்திய அரசிடம் பரிந்துரை செய்ததாகக் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய நீதிபதி மீது மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கட்ஜு குற்றம்சாட்டியுள்ளார்.

அதேநேரம் அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் ஜெயலலிதா நீதித் துறை விவகாரங்களில் தலையிட்டதே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE