மும்பை சிவாஜி பார்க்கில் தசரா பேரணி நடத்த சிவசேனாவின் இரு அணிகளுக்கும் அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை சிவாஜி பார்க்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிவசேனாவின் தசரா பேரணிக்கு, அக்கட்சியின் இரண்டு அணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஒவ்வோர் ஆண்டும் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் சிவசேனா கட்சி சார்பில் தசரா பேரணி நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அம்மாநிலத்தில் நடத்த அரசியல் கொந்தளிப்பால், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் சிவசேனா கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவசேனாவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் அக்கட்சியின் பாரம்பரிய தசரா பேரணியை சிவாஜி பார்க்கில் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தன. இரண்டு அணிகளில் யாருக்கு அனுமதி வழங்கினாலும் அது சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று கூறி, மும்பை மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இந்த முடிவுக்கு, சட்டசபையில் சிவசேனா கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி பதில் ஏதும் சொல்லாத நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி, அக்டோபர் 5-ம் தேதி சிவாஜி பார்க்கில் பேரணி நடத்த அனுமதி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

முன்னதாக, சிவசேனா தொண்டர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, “சிவசேனாவின் தசரா பேரணி சிவாஜி பார்க்கில்தான் தான் நடைபெறும்” என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு சிவாஜி பார்க்கில் விளையாட்டு அல்லாத பிற நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனாலும், பிஎம்சி ஒவ்வொரு ஆண்டும் தசரா பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கி வந்ததது. 2016-ம் ஆண்டு, மகாராஷ்டிரா அரசாங்கம் சிவாஜி பார்க்கில் சிவசேனாவின் தசரா பேரணி உள்ளிட்ட விளையாட்டு அல்லாத நடவடிக்கைகளுக்காக 45 நாட்கள் மட்டும் அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றியது.

கடந்த 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டும் கரோனா பெருந்தொற்று காரணமாக சிவாஜி பார்க்கில் தசரா பேரணி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE