ஜம்மு-காஷ்மீர் | புல்வாமா, சோபியானில் தியேட்டர்கள் திறப்பு

By செய்திப்பிரிவு

புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா, சோபியான் பகுதிகளில் திரையரங்குகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் 1980-ம் ஆண்டுகளில் சில திரையரங்குகள் செயல்பட்டன. ஆனால், அவற்றின் உரிமையாளர்கள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். காஷ்மீரில் தீவிரவாதம் பரவியதால் 1990-ம் ஆண்டுகளில் திரை அரங்குகள் மூடப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளை மீண்டும் திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நகர் லால் சவுக் பகுதியில் இருந்த ரீகல் சினிமா தியேட்டர் மீது 1999-ல் கையெறி குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து, நீலம், பிராட்வே போன்ற திரையரங்குகளும் மூடப்பட்டன.

தற்போது ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்களின் பொழுது போக்குக்காகவும், தகவல்களை அறிந்து கொள்வதற்காகவும், திறன் மேம்பாட்டுக்காகவும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள திரையரங்குகளை அரசு மீண்டும் திறந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரை படப்பிடிப்புக்கான தளமாக மாற்றவும், சினிமா தயாரிப்புக்குப் பயன்படுத்தவும், திரைப்படங்களை வெளியிடவும் ஜம்மு-காஷ்மீர் திரைப்பட மேம்பாட்டுக் கவுன்சில் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், புல்வாமா, சோபியான் பகுதிகளில் நேற்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இவற்றைத் திறந்துவைத்து, ‘பாக் மில்கா பாக்’ என்ற பாலிவுட் திரைப்படத்தைப் பார்த்தார். இது தொடர்பான படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நகரில் வரும் அக்டோபர் மாதம் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE