கடந்த ஆண்டில் ஓணம் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்தபோதும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டும் கேரளவாசி

By செய்திப்பிரிவு

கொச்சி: கடந்த ஆண்டின் ஓணம் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்தபோதும் கேரளாவைச் சேர்ந்த பி.ஆர்.ஜெயபாலன் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும்லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டின் ஓணம் லாட்டரியில் கொச்சியை அடுத்த மராடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பி.ஆர்.ஜெயபாலன் (58) முதல் பரிசை வென்றார். பரிசுத் தொகையான ரூ.12 கோடியில், 37 சதவீத வரி மற்றும் சர்சார்ஜ் ரூ.1.47 கோடி போக ரூ.6 கோடி கிடைத்தது. இந்த பரிசைப் பெற்று கோடீஸ்வரராகி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ஜெயபாலனின் வாழ்க்கை முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. அவர் இன்னமும் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஏற்கெனவே வசித்து வந்த வீட்டிலேயே குடியிருந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பண நிர்வாகம்தான் மிகப்பெரிய மாற்றம். எளிமையான வாழ்க்கை முறைதான் நீடித்த வாழ்க்கைக்கு சிறந்தது என்பது என்னுடைய நம்பிக்கை. பரிசுத் தொகையில் பெரும் பகுதியை வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்துள்ளேன். பச்சாலம் பகுதியில் 5 சென்ட், திருப்புனித்துராவில் 6 சென்ட் நிலம் வாங்கி உள்ளேன். மேலும் 4.5 ஏக்கர் நெல் வயல் வாங்க திட்டமிட்டுள்ளேன்.

எனக்கு பரிசு விழுந்த பிறகு,பல்வேறு அமைப்புகள் என்னிடம் நன்கொடை கோருகின்றன. ஆனால் எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறேன். இதனால் எனக்கு 2 கொலைமிரட்டல்கள்கூட வந்தன. ஏழை மக்கள் மருந்து வாங்குவதற்காக உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் நன்கொடை வழங்கி வருகிறேன்.

கடந்த ஆண்டு கரோனாகாரணமாக நான் முகக்கவசம் அணிந்து ஆட்டோ ஓட்டியதால்மக்களால் என்னை அடையாளம் காண முடியவில்லை. இதனால், “ஓணம் பரிசு வென்ற ஆட்டோ ஓட்டுநர் யார், அவர் அந்தப் பணத்தை எப்படி செலவிட்டார்” என என்னிடமே சிலர் கேட்டனர். மேலும் சுப நிகழ்ச்சிகளுக்கு நான் ரூ.100 மொய் வைப்பது வழக்கம். இப்போது அதிக தொகையை என்னிடம் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE