உ.பி. சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டுக்கும் உலகுக்கும் உதாரணம்: யோகி ஆதித்யநாத்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காவல் துறை நவீனமயமாக்கம் திட்டத்தின் கீழ், 56 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நவீன சிறை வேன்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி லக்னோவில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியதாவது.

உத்தர பிரதேச சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மக்கள் அடிக்கடி விவாதிக்கின்றனர். தற்போது இங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டுக்கும் உலகுக்கும் உதாரணமாக விளங்குகிறது. கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன் இங்கு கலவரம், அராஜகம், ரவுடித்தனம் உச்சகட்டத்தில் இருந்தது. தற்போது சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளது.

முந்தைய அரசுகள் குற்றவாளிகளை தப்ப விடுவதை வழக்கமாக கொண்டிருந்தன. நாட்டின் மிகப் பெரிய மாநிலமாக இருக்கும் உத்தர பிரதேத்தில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க காவல் துறை நவீனமயமாக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நவீன சிறை வேன்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பு கைதிகள் பழைய வாகனங்களில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட னர். இதில் கொண்டு செல்லப்பட்ட குற்றவாளிகள் போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோடினர். தற்போது வழங்கப்பட்டுள்ள நவீன சிறை வேனில் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பங்கள் உள்ளன.

இதன் மூலம் கைதிகளை நீதிமன்றங்களில் இருந்து சிறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போலீஸார் தேர்வு வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டு, அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆதித்யநாத் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE