சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிக்கும் இந்தியர்கள் - ஆண்டுக்கு 4.2 சதவீதம் பேர் வலைதள கணக்கு தொடங்குவதாக ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை இந்தியர்கள் செலவழிக்கிறார்கள் என்றும், ஆண்டுதோறும் 4.2 சதவீதம் பேர் புதிதாக வலைதளக் கணக்கை தொடங்குகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், உலகளாவிய டிஜிட்டல் நிலப்பரப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதில் வைரஸ் போல் சமூக ஊடகங்களும் தொற்றிக் கொண்டுள்ளன.

1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ‘சிக்ஸ் டிகிரி’ என்ற சமூக வலைதளம் முதல் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட வலைதளங்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு அவை சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட சில வலைதளங்கள் மட்டுமே மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

குறிப்பாக, இன்றைய தலைமுறை இந்தியர்களின் வாழ்வில், அவர்களது உறவுகள் முதல் தொழில் வாழ்க்கை, ஓய்வு நேரத்தை செலவிடுதல் வரையிலும் சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பங்கு வகிக்கின்றன.

அபரிமிதமான வளர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் இந்தியாவில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் புதிய சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் அனுபவத்தை, எண்ணங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும், தங்களின் தனித்துவத்தை வெளிக்காட்டவும், மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அதிகளவில் சமூக ஊடகத்தினுள் நுழைகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவும் சமூக ஊடகங்களை ஒரு ஆயுதமாக இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தண்ணீருக்கு வாத்து என்பதுபோல, இந்தியர்களுக்கு சமூக ஊடகம் அமைந்துவிட்டது. இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவோரில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குளோபல் ஸ்டேட்டஸ்டிக் என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியர்கள் தினசரி சராசரியாக 7 மணி 19 நிமிடங்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும், அதில், 2 மணி 30 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவழிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களிடையே இணைய இணைப்பு ஆழமாக ஊடுருவியதன் காரணமாக சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 467 மில்லியன் என்ற நிலையான விகிதத்தில் உயர்ந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்த இணைய பயனர்களின் எண்ணிக்கை 658 மில்லியனாகவும், இதில் செல்போன் இணைய பயனர்கள் 601 மில்லியனாகவும் உள்ளனர். அந்தவகையில் சமூக ஊடகம் இந்தியாவின் தினசரி இணைய பயன்பாட்டின் மிக முக்கிய பகுதியாக மாறிவிட்டது.

ஸ்மார்ட்போன்களின் விலை வீழ்ச்சி

ஸ்மார்ட்போன் விலை வீழ்ச்சி காரணமாக இந்தியா முழுவதும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுவே சமூக ஊடகப் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். புள்ளிவிவரப்படி, சமூக ஊடக பயனர்களின் ஆண்டு வளர்ச்சி 4.2 சதவீதமாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு 19 மில்லியன் புதிய பயனர்கள் சமூக ஊடகங்களில் சேர்ந்துள்ளனர்.

ஏறக்குறைய ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் ஒரு சமூக ஊடக தளத்தையாவது அணுகுவதால், பெரிய மற்றும் சிறிய வணிகங்கள் தங்களது தயாரிப்புகளை மக்களிடையே ‘மார்க்கெட்டிங்’ செய்வதற்கு சமூக ஊடகத்தை முதல் விருப்பமாகத் தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், 2022-ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடக தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்தியாவில் இணைய பயனர்களில் 76.50 சதவீதம் பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக ‘ஃபேஸ்புக்’ தளத்தில் 74.70 சதவீதம் பேர் தங்களது சுய விவரத்தைக் கொண்டுள்ளதாகவும், 40.90 சதவீதம் பேர் ட்விட்டர், 37.2 சதவீதம்பேர் ‘லிங்க்டு இன்’, 23.40 சதவீதம் பேர் ‘எம்எக்ஸ் டாகா டக்’, 23 சதவீதம் பேர் ‘மோஜ்’ மற்றும் ‘ஸ்கைப்’ என்ற சமூக தளங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல், மெசேஞ்சர் பயன்பாட்டில் வாட்ஸ்அப் 81.20 சதவீதம் பேரும், டெலிகிராம் 56.90 சதவீதம் பேரும், ஃபேஸ்புக் மெசேஞ்சர் 49.30 சதவீதம் பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், 2022-ல் செல்போன்கள் 75.91 சதவீத பங்குகளுடன் இந்தியாவில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஸ்மார்ட்போன்களின் விலை குறைவே இந்த ஏற்றத்துக்கு காரணமாகும். லேப்டாப், கம்ப்யூட்டர் 23.67 சதவீதமும், டேப்லெட் 0.42 சதவீதமும் இந்தியாவில் அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்துகின்றன.

வரும் காலங்களில் இன்னும் பல புதிய சமூக வலைதளங்களின் வருகை அதிகரிக்கும். அதன் ஆதிக்கம் இளைய தலைமுறைகளைக் கட்டுப்பாட்டில் வைக்கும் சூழல் ஏற்படக் கூடும்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘சமூக ஊடகங்களும் ஒருவித போதைப் பொருள்தான், அந்த போதைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல், உருப்படியான செயல்களுக்காக மட்டுமே வலைதளங்களைப் பயன்படுத்த வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்