நமிபியா: செப்டம்பர் 17, இந்தியாவுக்கு விசேஷமான நாள். காரணம் அன்றுதான் ஆப்பிரிக்காவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்படுகின்றன. இவற்றை ஆப்பிரிக்காவின் நமிபியாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு கொண்டு வருகின்றனர். இதற்காக B747 ரக ஜம்போ ஜெட் விமானம் நமிபியா தலைநகரை சென்றடைந்துள்ளது. அந்த ஜெட் விமானத்தில் 5 பெண் சிவிங்கிகளும், 3 ஆண் சிவிங்கிகளும் கொண்டு வரப்படுகின்றன. இவை அனைத்தும் ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்து சேரும். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களால் இவை பூங்காவிற்குள் திறந்துவிடப்படும்.
1950-களுக்குப் பின்னர் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில், மீண்டும் அவை இந்தியக் காடுகளுக்கு வருவது வன உயிரி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவிங்கிகளின் பயணம் குறித்து நம்பியாவிற்கான துணைத் தூதர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துணிச்சல்காரர்களின் மண்ணில் ஒரு சிறப்புப் பறவை கால் பதித்துள்ளது. அது புலிகளின் தேசத்திற்கு இந்த நல்லெண்ண தூதுவர்களைக் கொண்டு சேர்க்கும்’ என்று பதிவிட்டிருந்தார்.
சிவிங்கிகளைக் கொண்டு வருவதற்காக இந்த விமானத்தின் உட்புறம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் புலியின் முகம் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. உள் கேபினில் 8 சிவிங்கிகளும் தனித்தனியாக கூண்டுகளில் வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கூண்டுகள் கால்நடை மருத்துவர்கள் நெருங்கும் வகையிலேயே இருக்கும். இந்த அல்ட்ரா லாங் ரேஞ் விமானமானது 16 மணி நேரம் பறந்து இந்தியா வந்து சேரும். எரிபொருள் நிரப்ப எங்கும் நிறுத்தாமல் கொண்டுவர முடிவு செய்துள்ளனர். அதனால் தேவையான எரிபொருள் முழுமையாக நிரப்பி விமானம் இயக்கப்படுகிறது. இடையில் விமானத்தை நிறுத்தினால் அது சிவிங்கிப் புலிகளுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறு கொண்டுவரப்படுகிறது.
இந்த சிவிங்கிப் புலிகள் ஒட்டுமொத்த பயணத்திலும் வெறும் வயிறாக உணவருந்தாமல்தான் வரவேண்டும் என்று வனத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் சில நேரங்களில் நீண்ட பயணத்தின்போது சிவிங்கிகளுக்கு குமட்டல் உள்ளிட்ட அசவுகரியங்கள் ஏற்படலாம் என்பதால் இவ்வாறாக வெறும் வயிற்றில் பயணப்பட வைக்கப்படுகின்றன.
1952-ல் அரசாங்கம் சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவித்தது. கடைசியாக சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் சால் வனப்பகுதியில் 1948ல் ஒரு சிவிங்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தான் இந்தியாவின் கடைசி சிவிங்கியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிவிங்கிகள் எப்படி அழிந்தன? - தியோடர் பாஸ்கரன் தனது தாமரை பூத்த தடாகம் நூலில் இந்த சிவிங்கிப் புலிகள் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவருடைய நூலில் இருந்து, "துப்பாக்கி நம் நாட்டிற்கு வரும்முன் அதாவது 16ஆம் நூற்றாண்டுக்கு முன் அரசர்கள் சிவிங்கிப் புலிகளைப் பிடித்து வேட்டைக்குப் பழக்கியிருந்தனர்.
வேட்டை சிவிங்கிகளுக்கு கண்மூடியிட்டு மாட்டு வண்டியில் காட்டிற்கு கொண்டு செல்வார்கள். அங்கு வெளிமான்கள் காணப்பட்டால் சிவிங்கியை அவிழ்த்துவிடுவார்கள். அது மான்களை சில விநாடிகளில் அடித்துக் கொன்றுவிடும். அடிக்கப்பட்ட மானின் ஒரு காலை அறுத்து சிவிங்கிக்கு பரிசாகக் கொடுப்பார்கள். இவ்வாறு வேட்டைக்கு பயிற்சியளிக்கப்பட்ட 1000 சிவிங்கிகள் அக்பரிடம் இருந்தது என்று அக்பர்நாமா நூல் கூறுகின்றது. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் இடப்பட்டிருந்தது. திப்பு சுல்தானிடம் 16 சிறுத்தைகள் இருந்தன.
சிறுத்தை, வேங்கை போன்ற பெரும் பூனைகள் அவ்வப்போது ஆட்கொல்லிகளாக மாறி மக்களை பீதியில் ஆழ்த்திய கதைகளை ஜிம் கார்பெட் போன்ற வேட்டையாடிகள் கூறியிருக்கின்றார்கள். ஆனால் சிவிங்கிப் புலிகள் மனிதர்களை துன்புறுத்தவே இல்லை. இருந்தாலும் ஆங்கிலேய ஆட்சியில் சிவிங்கியைக் கொன்று அதன் வாலைக் கொண்டுவந்து காண்பித்தால் அரசு ரூ.18 கொடுத்தது. ஆடுகளைச் சில இடங்களில் கொன்றதற்காக அதற்கு இந்த கதி. 1876ஆம் ஆண்டில் மட்டும் 135 சிவிங்கிப் புலிகள் இவ்வாறு மதராஸ் ராஜதானியில் கொல்லப்பட்டதாக ஒரு ஆவணக் குறிப்பு சொல்கின்றது. தமிழ்நாட்டு குட்டி அரசர்களும் வேட்டைச் சிவிங்கிகளை வளர்த்தனர். 1900ல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் புதுக்கோட்டை அரசரின் அரண்மனையில் இருந்து சிவிங்கிப் புலி ஒன்று காணப்படுகின்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago