“முன்மாதிரியாக செயல்படுங்கள்” - ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார்.

2020-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரிகள் 175 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உதவி செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை, புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் மத்தியில் குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் பேசியது: “மக்களுக்கு அரசு அளிக்கும் சேவையை மேம்படுத்துவதிலும், மக்களின் குறைகளை விரைவாக தீர்ப்பதிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மிக உயர்ந்த விசுவாசத்தைக் காட்ட வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படவும் உறுதிப்படுத்தப்படவும் பொறுப்பேற்க வேண்டும். எவரது கவனத்தையும் ஈர்க்க முயலாதீர்கள். அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ளாதீர்கள்.

அரசின் கொள்கை முடிவுகளிலும், அதன் செயலாக்கத்திலும் பங்கேற்க மக்கள் தற்போது விரும்புகிறார்கள். அரசின் சேவைகளில் அவர்கள் திருப்தி அடைவதை உறுதிப்படுத்தக் கூடியவர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் விளங்க வேண்டும். அரசின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துவதில் ஐஏஎஸ் அதிகாரிகள் முன்மாதிரியாக திகழ வேண்டும். அரசு மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்கு உங்களின் கல்விப் பின்னணி பயன்பட வேண்டும்.

ஐஏஎஸ் அதிகாரிகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு நிர்வாகம் உள்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பது ஊக்கமளிக்கக்கூடிய முன்னேற்றம்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE