பஞ்சாப் | எம்எல்ஏ.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி புகார் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு 

By செய்திப்பிரிவு

மொஹாலி: தங்கள் கட்சியின் எம்எல்ஏ.,க்களுக்கு பாஜகவினர் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பஞ்சாப் போலீஸார் லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக நேற்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவினர் பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் அரசை கவிழ்பதற்காக ஆபரேஷன் லோட்டஸ்-ன் கீழ் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 10 பேரை விலைக்கு வாங்க அணுகியதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் அவர், பாஜகவினர் அரசுகளை உடைப்பதற்காக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நோக்கத்தோடு செவ்வாய்க்கிழமையன்று ஒரு பெரிய பேரம் நடந்ததாக ஆம் ஆத்மி கூறியது. அதாவது, கட்சியில் இருந்து வெளியேறினால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு ரூ.20 முதல் 25 கோடி வரை தரப்படும் என்று பாஜக பேரம் பேசியதாக பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

இதுகுறித்து பஞ்சாப்பின் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, "டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களால் அனுப்பப்பட்ட அக்கட்சி பிரமுகர்கள் பஞ்சாப்பில் முகாமிட்டுள்ளன. அவர்கள் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை ரகசியமாக தொலைபேசி வழியாக அணுகியுள்ளனர். அவர்களிடம் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி பஞ்சாப் அரசை உடைக்க வேண்டும். அப்படி வெளியேறினால் அவர்கள் டெல்லியில் உள்ள தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதுடன் ரூ 25 கோடி வழங்கப்படும். மூன்று நான்கு எம்எல்ஏக்களை அழைத்து வரும் எம்எல்ஏக்களுக்கு ரூ.50 - 70 கோடி வரை வழங்கப்படும் என்று பேரம் பேசப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பஞ்சாப் பாஜக, இது ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு என்றும், ஆம் ஆத்மி அரசு தனது தோல்விகளில் இருந்து மக்களை திசைதிருப்ப இப்படி குற்றம்சாட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE