2024 தேர்தல் தொடர்பாக ஆலோசனை?.. - நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

பாட்னா: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்றிரவு திடீரென பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவராகினார்.

ஆனால், கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.

மே.வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் பின்னர் காங்கிரஸில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் பிரசாந்த் கிஷோர்.

இதனிடையே, நேற்று இருவரும் திடீரென சந்தித்துக்கொண்டதுடன் சுமார் 45 நிமிடம் ஆலோசனையும் நடத்தியுள்ளனர். ஜனதா தள ஐக்கிய கட்சியின் முன்னாள் தலைவரான பவன் வர்மா இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், அவரும் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

சந்திப்பு தொடர்பாக பேசிய நிதிஷ்குமார், "நாங்கள் சந்தித்துக்கொண்டோம். நாங்கள் விசேஷமாக எதுவும் பேசவில்லை. சாதாரண உரையாடல் தான் எங்களுக்குள் இருந்தது. நாங்கள் சந்திப்பதில் என்ன தவறு உள்ளது?. நீண்ட காலமாக எங்களுக்குள் பழக்கம் உள்ளது. நான் பிரசாந்த் கிஷோர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இருவரும் நான்கு முறை சந்தித்துள்ளனர். என்றாலும் இம்முறை சந்தித்தது 2024 தேர்தலை மையப்படுத்தி அமைந்தது என்று சொல்லப்படுகிறது. 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களமிறங்குவார் என சொல்லப்பட்டு வரும்நிலையில் பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE