புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்கார கவுரி அம்மன் வழிபாடு தொடர்பான வழக்கு விசாரணையை நடத்தலாம். இந்த வழக்கு மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வராது என்று தெரிவித்துள்ள வாரணாசி நீதிமன்றம், கியான்வாபி மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஒரு பகுதியை இடித்து, அங்கு கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி வளாக சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை கோயிலின் பக்கமாக அமைந்துள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.
சிங்கார கவுரி அம்மனுக்கு தினமும் பூஜைகள் நடத்த அனுமதிக்கக் கோரி டெல்லியைச் சேர்ந்த ராக்கி சிங், சீதா சாஹு, லட்சுமி தேவி, மஞ்சு வியாஸ் மற்றும் ரேகா பாதக் ஆகிய 5 பெண்கள், கடந்த 2021 ஆக. 18-ல் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவிக்குமார் திவாகர், மசூதிக்குள் களஆய்வு நடத்த உத்தரவிட்டார். அதன்படி, நடத்தப்பட்ட கள ஆய்வில், அங்கு கோயில் இருந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன. மசூதியில் தொழுகைக்கு முன்னர் கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதை மறுக்கும் முஸ்லிம்கள், அது நீரூற்று என்று தெரிவித்து வருகின்றனர்.
» பாதுகாப்புக்காக தடுத்து நிறுத்திய போலீஸ்.. சொன்னபடியே ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் சாப்பிட்ட கேஜ்ரிவால்
» ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் பி17ஏ ரக போர்க்கப்பல் ‘தரகிரி' அறிமுகம்
மேலும், சிங்கார கவுரி அம்மன் வழிபாடு தொடர்பான வழக்கு, மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ன்படி விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல. எனவே, அந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று கியான்வாபி மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை கடந்த மே 16-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இந்த வழக்கை விசாரிக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து 3 மாதங்களில் தீர்ப்பளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து, வாரணாசி மாவட்ட நீதிமன்ற மூத்த நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வாஸ், கடந்த மே 23-ம் தேதி முதல் வழக்கை விசாரித்து வந்தார். இருதரப்பு வாதங்களும் ஆகஸ்ட் 24-ல் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.
மிக முக்கியமாகக் கருதப்படும் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி வாரணாசி முழுவதும் நேற்று முன்தினம் மதியம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தைச் சுற்றி நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வாஸ், தனது 26 பக்க தீர்ப்பை வெளியிட்டார். அதன் கடைசி பகுதியை 10 நிமிடங்களில் நீதிபதி படித்து முடித்தார்.
அதில், “சிங்கார கவுரி அம்மன் வழிபாடு வழக்கானது, மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ன்கீழ் வரவில்லை. எனவே, கியான்வாபி மசூதி தரப்பினர் கோரியபடி இந்த வழக்குக்கு தடை விதிக்க முடியாது. முஸ்லிம் தரப்பு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் சிங்கார கவுரி அம்மன் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சிங்கார கவுரி அம்மன் வழக்கின் மனுதாரர் ஒருவரின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, “மசூதி தரப்பின் மனு தள்ளுபடியானதால் இனி அதனுள் நடத்தப்பட்ட கள ஆய்வும் விசாரிக்கப்படும். இதற்கு முஸ்லிம் தரப்பினர் பதில் அளித்தாக வேண்டும். ஒசுகானாவில் காணப்பட்டுள்ள சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய அனுமதி கோரியது உள்ளிட்ட வழக்குகளின் விசாரணையும் தொடரும்” என்றார்.
வாரணாசி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கியான்வாபி மசூதி தரப்பினர் தயாராகி வருகின்றனர்.
மேலும் 3 முக்கிய வழக்குகள்: சிங்கார கவுரி அம்மன் வழிபாட்டு வழக்கில், கள ஆய்வுக்குப் பின்னர், கியான்வாபி மசூதி மீதுவாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மேலும் 3 மனுக்களை விஸ்வவேதிக் சனாதன் சங் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் கிரண்சிங் என்ற பெண் தாக்கல் செய்துள்ளார். முதல் மனுவில், ‘கியான்வாபி மசூதியானது ஆதி விஸ்வேஸ்வர் கோயிலை இடித்து கட்டப்பட்டது. அங்கு சிவலிங்கம் கிடைத்ததன் மூலம், இது உறுதியாகி உள்ளது’ என்று கூறியுள்ளார். மற்றொரு மனுவில், மசூதிக்குள் கிடைத்துள்ள சிவலிங்கத்தை பூஜை செய்ய இந்துக்களை அனுமதிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. மூன்றாவது மனுவில், ‘மசூதியின் பகுதியானது கோயிலாகி விட்டதால் அதற்குள் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 3 மனுக்களையும் கடந்த மே மாதம் விசாரித்த நீதிபதி அஜய்கிருஷ்ண விஷ்வாஸ், விசாரணையை விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மகேந்திர குமார்பாண்டேவுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த மனுக்கள் மீதான விசாரணை மே 30-ம் தேதி முதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம்: உ.பி.யின் அயோத்தியில் பாபர் மசூதி - ராமர் கோயில் தொடர்பான வழக்கு தீவிரமான நிலையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ், ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்தார். ‘மத்திய அரசு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991’ என்ற அந்த சட்டத்தில், சுதந்திரத்துக்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் எந்த மாற்றங்களும் செய்யக் கூடாது. எந்த வழக்கும் தொடுக்க முடியாது. இதில், பாபர் மசூதிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
அதன்பின், மசூதிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல வழக்குகளை, இந்த சட்டத்தைக் காட்டி நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்கவில்லை. எனினும், வாரணாசி, மதுரா உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago