பாதுகாப்புக்காக தடுத்து நிறுத்திய போலீஸ்.. சொன்னபடியே ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் சாப்பிட்ட கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கேஜ்ரிவால் பிரசாரம் செய்தார். குஜராத் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் கேஜ்ரிவால் அங்கு முகாமிட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாகவே ஆட்டோ ஓட்டுநர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி. நீங்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஒருமுறை ஒரு ஆட்டோ ஓட்டுநர் வீட்டுக்குச் சென்றீர்கள். அங்கு நீங்கள் உணவருந்தினீர்கள். நான் அந்த வீடியோவைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் என் வீட்டுக்கும் உணவு அருந்த வருவீர்களா?” என்றார்.

அதற்கு கேஜ்ரிவால், “நிச்சயமாக வருகிறேன். இன்று இரவு வரலாமா? 8 மணிக்கு வந்தால் சரியாக இருக்குமா? நான் என்னுடன் இரண்டு பேரை அழைத்துவரலாமா?” என்று கேட்க, அந்த ஆட்டோ ஓட்டுநர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த உரையாடல் அடங்கிய வீடியோ ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது.

இதனிடையே, சொன்னபடியே அந்த ஆட்டோ ஓட்டுநர் வீட்டுக்கு இன்றிரவு சென்ற அரவிந்த் கேஜ்ரிவால் அவர் வீட்டில் உணவருந்தி ஆச்சர்யப்படுத்தினார். இரவு விருந்துக்கான அழைப்பை ஏற்று இரவு 7.30 மணியளவில் ஹோட்டலில் இருந்து புறப்பட்ட அவர், கட்லோடியா பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் டான்டானி என்பவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினார். அவருடன் ஆம் ஆத்மி பிரமுகர்களும் உணவருந்தினர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் உடன் அமர்ந்து கேஜ்ரிவால் சப்பாத்தி சாப்பிட்டார்.

முன்னதாக, பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, குஜராத் காவல்துறை ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு உணவருந்தச் செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தியது. ஆட்டோவில் புறப்பட்ட அவரை தடுத்து நிறுத்த, ஆட்டோவில் இருந்தவாறே போலீஸுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தனக்கு குஜராத் காவல்துறையின் பாதுகாப்பு தேவையில்லை எனக் கூறினார் கேஜ்ரிவால். மேலும், "நீங்கள் வெட்கப்பட வேண்டும். இங்குள்ள தலைவர்கள் பொதுமக்களுடன் ஈடுபடாததால் குஜராத் மக்கள் அவதிப்படுகின்றனர். நாங்கள் மக்களுடன் பழகுகிறோம், நீங்கள் எங்களைத் தடுக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பை எடுத்துக் கொள்ளுங்கள், எங்களுக்குத் தேவையில்லை. வலுக்கட்டாயமாக கொடுக்கிறீர்கள். எங்களுக்கு பாதுகாப்பு.எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று எழுத்துப்பூர்வமாக உங்களிடம் கொடுத்துள்ளேன்" என்றும் போலீஸ் உடன் கேஜ்ரிவால் வாக்குவாதம் செய்தார். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது. எனினும், பிறகு அனுமதி கொடுக்கப்பட அதன்பிறகே ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்குச் சென்று உணவருந்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE