இந்திய ரயில்வேயில் முதன் முதலில் உருவான மண்டலம் என்ற பெருமை தெற்கு ரயில்வேக்கு உண்டு. தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இதன் எல்லையாக தமிழகம், கேரளம், புதுச்சேரி முழுமையாகவும், ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 5,087 கிமீ தொலைவுக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் சரக்கு ரயில், பயணிகள் ரயில் என்று மொத்தம் 1,322 ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் ரயில்களில் ஆண்டுக்கு 80 கோடி பேர் பயணிக்கின்றனர்.
பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தாலும், ரயில்களின் வேகத்தில் வளர்ச்சி என்பது மெதுவாகவே நகர்கிறது. குறிப்பாக நீண்ட தூரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 50 கிமீதான் உள்ளது.
சில ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் உள்ளது. குறிப்பாக, சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலின் சராசரி வேகம் 80 கிமீ ஆகும். அதேநேரத்தில், சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும்.
மக்களின் முக்கிய போக்குவரத்தான ரயில்வே வழித்தடங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறும்போது, “சென்னை -ஜோலார்பேட்டை, சென்னை - மதுரை ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 110 கிமீ வேகம் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் தென் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சென்னை - கன்னியாகுமரி வரை ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது இயக்கப்படும் வேகத்தை மணிக்கு 130 கிமீ என்று அதிகரிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக களம் இறங்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து தட்சிண ரயில்வே பென்ஷனர் சங்கத் தலைவர் இளங்கோ கூறியதாவது: ஒரு வழித்தடத்தில் மணிக்கு 90 கிமீ வேகத்திலும், மற்றொரு வழித்தடத்தில் மணிக்கு 40 கிமீ வேகத்திலும் ரயில்கள் இயக்கப்படும். ஆனாலும், இதன் மொத்த சராசரி வேகம் 50 கிமீதான். ரயில்வே தண்டவாளத்தின் சக்தியை அதிகரித்து, தேசிய ரயில் திட்டத்தை நிறைவேற்றினால், இந்திய ரயில்வேயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.
நாட்டில் ஆண்டுக்கு 4,500 கிமீ தொலைவுக்கு பாதைகளை புதுப்பிக்க வேண்டும் என்றால், சுமார் 3,000 கிமீ தொலைவுக்குதான் புதுப்பிக்கப்படுகின்றன. இதை முழுமையாக புதுப்பிக்க வேண்டும்.
தேசிய ரயில் திட்டத்தில் விரைவு ரயில், சரக்கு ரயிலுக்கு என தனித்தனி பாதைகளை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான நிதி ஒதுக்கவில்லை. எனவே, போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
தண்டவாளத்தை ஒட்டி இரு பக்கமும் சுவர்களை எழுப்ப வேண்டும். இரட்டைப் பாதை திட்டங்களை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தேவையான இடங்களில் லெவல் கிராசிங்கை குறைக்கும் விதமாக, நடை மேல்பாலம், கீழ் பாலம் அமைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியும் என்றார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டில் சென்னை சென்ட்ரல் - கூடூர் மற்றும் சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா வழித்தடத்தில் அதிகபட்சம் அனுமதிக்கப்பட்ட வேகத்தை மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - சொரனூர், சென்னை எழும்பூர்- திண்டுக்கல் ஆகிய வழித்தடங்களில் வரும் 2024-25-ம் ஆண்டுக்குள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, ரயில் தண்டவாளம் புதுப்பித்தல் பணி, பாலங்களை வலிமைப்படுத்தல், வளைவுகளை எளிமையாக்குதல் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், சிக்னல் முறை, உயர்மட்ட மின்சாதனங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவது மூலமாக, தெற்கு ரயில்வேயின் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது
இவ்வாறு அவர்கள் கூறினர்.
160 கிமீ வேகம்
சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிமீ வரை அதிகரிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. சென்னை -ஜோலார்பேட்டைக்கான விரிவான திட்ட அறிக்கை முடிந்துவிட்டது. ஜோலார்பேட்டை - பெங்களூர் வழித்தடத்தில் வேகத்தை அதிகரித்தல் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக, தென் மேற்கு ரயில்வேயுடன் தெற்கு ரயில்வே இணைந்து பணியாற்றி வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago