பெங்களூருவில் தொடரும் கனமழை: வெள்ளம் புகுந்ததால் விடுதிகளில் தஞ்சமடையும் மக்கள்

By இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் தொடரும் கனமழையால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளிலும், சுரங்க பாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் மக்கள்அவசர வேலைக்கு ஜேசிபி, டிராக்டர் மூலம் வெளியே சென்று வருகின்றனர்.

எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, சர்ஜாப்பூர் உட்ப‌ட 80க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. அங்குள்ள அடுக்குமாடிகுடியிருப்புகள், தனி குடியிருப்புகள், சொகுசு பங்களாக்கள் உட்பட‌ ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.‌

அன்அகாடமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கவ்ரவ் முஞ்சால், பர்ப்பிள் ஃப்ரண்ட் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி மீனா கிரிஸபள்ளா உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டன‌ர். வீடுகளில் இருந்து வெளியேறியமக்கள் தனியார் விடுதிகளில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, கோரமங்களா, பழைய ஏர்போர்ட் சாலை, வெளிவட்ட சாலை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளும் அடுத்த 10 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனியார் விடுதிகளில் ஒரு நாளைக்கு 2 பேர் தங்கும் அறைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், 4 பேர் தங்கும் அறைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 வரையிலும், ஆடம்பர அறைகள் ரூ.45 ஆயிரம் வரைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். பர்ப்பிள்ஃப்ரண்ட் நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரி மீனா கிரிஸபள்ளா, ஒரு நாளைக்கு ரூ. 40 ஆயிரம் கொடுத்து விடுதியில் தங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

ஏழைகளுக்கு முகாம்

பணக்காரர்கள் தனியார் விடுதிகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில், ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் தங்கும் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான வசதிகளை அரசும், பெங்களூரு மாநகராட்சியும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்ற‌து.

தூங்கிய அமைச்சர்

மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற‌னர். இந்த கூட்டத்தின் போது வருவாய்த்துறை அமைச்சர்அசோக் தலையை கையால் தாங்கியவாறு தூங்கும் வீடியோவெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார்கூறும்போது, ‘‘பெங்களூரு உட்படஒட்டுமொத்த கர்நாடகாவும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்திலே அமைச்சர் அசோக் தூங்கி கொண்டிருக்கிறார். மக்களைப் பற்றி கவலையே இல்லாதவர் தான் இவ்வாறு நடந்து கொள்ள முடியும்''என விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE