கார் விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி உடல் மும்பையில் தகனம்

By செய்திப்பிரிவு

வொர்லி: கடந்த ஞாயிறு அன்று மும்பையில் கார் விபத்தில் உயிரிழந்த டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் உடல் மும்பை வொர்லியில் உள்ள மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றொரு நபரான ஜெஹாங்கிர் பண்டோல் உடலும் நேற்று தகனம் செய்யப்பட்டது.

சைரஸ் மிஸ்திரியின் இறுதிச்சடங்கில் முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். சைரஸ் மிஸ்திரிக்கு வயது 54. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். முன் இருக்கையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் அனாஜிட்டா பண்டோலும் அவரது கணவர் டேரியஸ் பண்டோலும் அமர்ந்திருந்தனர். பின் இருக்கையில் சைரஸ் மிஸ்திரியும் டேரியஸ் பண்டோலின் சகோதரர் ஜெஹாங்கிர் பண்டோலும் அமர்ந்திருந்தனர். மதியம் 3 மணி அளவில் மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள சூர்யா நதி மேம்பாலத்தில் அவர்களது கார் அதிவேகமாக சென்ற நிலையில், மற்றொரு காரை இடப்புறமாக முந்த முயன்றபோது சாலைத் தடுப்புச் சுவற்றில் மோதியது.

பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரியும், ஜெஹாங்கிர் பண்டோலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது. முன்இருக்கையில் இருந்த அனாஜிட்டா பண்டோலும் அவரது கணவரும் படுகாயமடைந்தனர். அதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக குஜராத் மாநிலம் வாபியில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE