பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா சொட்டு மருந்துக்கு ஒப்புதல்: மத்திய சுகாதார அமைச்சர் மாண்டவியா தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா வைரஸுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழி சொட்டு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்பு தல் அளித்துள்ளது.

கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தாக, மூக்கு வழியாக விடும் சொட்டு மருந்தை தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தை சேர்ந்தபாரத் பயோடெக் நிறு வனம் ஈடுபட்டு வந்தது. இந்த மருந்தின்3 மற்றும் 4-ம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள அந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தனது ட்விட்டர் பதிவில்,“பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பு சொட்டு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குஅவசர கால அடிப்படையில் பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை, கரோனா தொற்று நோய்க்கு எதிரான நமது ஒன்றுபட்ட போரை மேலும் வலுப்படுத்தும். கரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் போரில் இந்தியா தனது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வளங்களை பயன்படுத்தி உள்ளது. கரோனா தொற்று நோயை நாங்கள் முறியடிப்போம்” என்று கூறியுள்ளார்.

பாரத் பயோடெக் நிறுவனம் சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பில், தனது கரோனா தடுப்பு சொட்டு மருந்து பாதுகாப்பானது, பொறுத்துக் கொள்ளக் கூடியது மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது என மூன்றாம் கட்ட பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சொட்டு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE