“ராஜபாதை பெயரை மாற்றுவது அதிகாரத்தின் பித்துநிலை” - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டாவின் புல்வெளிப் பகுதியை கர்தவ்ய பாதை ( Kartavya Path) என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்வது அதிகாரத்தின் பித்துநிலை” என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. கர்தவ்ய பாதை என்றால் கடமையைச் செய்யும் பாதை என்று அர்த்தமாம். இந்தப் பெயர் மாற்றத்தை பாஜகவினர் கொண்டாடி வருகிறது. ஆனால் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. எல்லாவற்றிலும் தற்பெருமை பேசிக்கொள்ளும் அரசு அதன் பித்துநிலையில் இந்தப் பெயர் மாற்றத்தை செய்துள்ளதாக சாடியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "இங்கே என்ன நடக்கிறது? நமது கலாசாரத்தை, பாரம்பரியத்தை மாற்றுவதையே பாஜக தனது ஒரே கடமையாக கொண்டிருக்கிறது. வரலாற்றை மாற்றி அதிகாரத்தைத் திணிக்கும் பித்துநிலையில் பாஜக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்ஜேடியின் மனோஜ் ஜா, "முதலில் ரேஸ் கோர்ஸ் சாலை லோக் கால்யாண் மார்க் என்று மாறியது. பின்னர் ராஜபாதை கர்தவ்ய பாதையாக மாறியிருக்கிறது. ஆனால், இன்று இந்தியாவின் பெரும் சவால்களான வேலையின்மை, பணவீக்கம், சமூக நல்லிணக்கம் ஆகியன எந்த மாற்றமும் காணவில்லை. மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் மவுனமாக இருக்கின்றன சாலைப் பெயர் மாற்றத்தில் திறமையைக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில், "ராஜபாதையை கர்தவ்ய பாதையாக மாற்றியது சிறந்து முடிவுதான். இது உங்கள் அனைவருக்குமே மக்கள் சேவை என்பது ஆட்சி உரிமை அல்ல, கடமையை ஆற்றுவதே என்பதை புரியவைக்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ராஜபாதையின் வரலாறு: ராஜபாதை என்பது ஆரம்பத்தில் கிங்ஸ்வே என்று அறியப்பட்டது. அங்கு குடியரசு தின அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டா பெயரை மாற்றுவதற்காக அதிகாரபூர்வ ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லி முனிசிபல் கவுன்சிலில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த பெயர் மாற்ற முடிவை பாஜகவினர் ஆதரித்துப் பேசுகையில், ''சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஐந்து கடமைகளைப் பட்டியலிட்டுப் பேசியதை சுட்டிக்காட்டினர். நம் நாடு இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த தேசமாக இருக்கும். அதற்கு நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.

முதலாவது, நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது. இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும். மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றுக் கொள்வோம். கடைசியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது" என்று பிரதமர் மோடி பட்டியலிட்டார். இதில் எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும் என்பது என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே இந்த பெயர் மாற்றம் செய்யப்படுகிறது'' என்று கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE