புதுடெல்லி: உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
2021-ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனைவிட வளர்ச்சி அடைந்ததாகவும், இதனால் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியதாகவும் ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா இந்தப் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தது.
சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்ட தகவலின்படி, 2014-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தி 3 டிரில்லியன் டாலராகவும் இருந்தது.
மேலும், 2022-ல் இந்தியாவின் ஜிடிபி 3.5 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 3.4 டிரில்லியன் டாலராகவும் உள்ளது. அதேசமயம், 2027-ல் இந்தியாவின் ஜிடிபி 5.5 டிரில்லியன் டாலராக இருக்கும். ஆனால், அந்த சமயத்தில் பிரிட்டனின் ஜிடிபி 4.6 டிரில்லியன் டாலராகவே இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.
» ஓணம் பண்டிகை பூ கொள்முதலுக்காக தேனி வரும் கேரள வியாபாரிகள்: விலை கூடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
துரிதமாக மீண்டது இந்தியா
கரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால், உலக அளவில் தொழில் துறை செயல்பாடுகள் முடங்கின. இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளானது.
2021-ம் ஆண்டில் கரோனா 2-ம் அலை தீவிரம் குறைந்தபிறகு பொருளாதாரம் மீளத் தொடங்கியது. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் வேகமாக மீண்டது. அதேசமயம், உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்துவந்த பிரிட்டனின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவுக்கு உள்ளானது.
பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய பிரிட்டன்
பிரிட்டன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. 2019-ல் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற போரிஸ் ஜான்சன், 2020-ல் பிரெக்ஸிட்டை நிறைவேற்றியதால், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது. இதையடுத்து, டாலருக்கு நிகரான பிரிட்டனின் நாணய மதிப்பு சரியத் தொடங்கியது.
இந்தச் சூழலில், பொருளாதார ரீதியாக பிரிட்டனை வலுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. ஆனால், கரோனா காரணமாக பிரிட்டனின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. மேலும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. வேலையின்மை தீவிரமடையத் தொடங்கியது.
இதற்கிடையில், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பிரிட்டனின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குத் தள்ளியது. பிரிட்டனில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் பணவீக்கம் உச்சம் தொட்டது.
841 பில்லியன் டாலர்
அதேசமயம், இந்தியாவும் கரோனா மற்றும் ரஷ்யா- உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டாலும், நாட்டின் பொருளாதாரம் மீள்தன்மையுடன் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
குறிப்பிட்ட கால அளவில் இந்தியா வின் பொருளாதார மதிப்பு 841 பில்லியன் டாலராக உயர்ந்த நிலையில், பிரிட்டனின் பொருளாதார மதிப்பு 814 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்நிலையில், பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
பிரிட்டனின் பொருளாதாரப் பின்னடைவு 2024-ம் ஆண்டுவரை தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதையடுத்து, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
இந்தியாவின் வளர்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “கரோனா காலத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட இந்தியா, அதிலிருந்து துரிதமாக மீண்டு, உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக அடையாளம் பெற்றுள்ளது.
உலக நாடுகளில் பொருளாதார தேக்கநிலையை ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்த அறிக்கையை அண்மையில் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. அதில், பல ஆசிய நாடுகளில் பொருளாதார தேக்கநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும், அதேசமயம், இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு பூஜ்யமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதை இது உணர்த்துகிறது. இது நாட்டுக்கு பெருமிதம் அளிக்கக்கூடியது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மகிந்திரா ட்விட்
இதேபோல, இந்தியாவின் வளர்ச்சி குறித்து மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திராவின் ட்விட்டர் பதிவு வைரலாகி உள்ளது.
பிரிட்டன் இந்தியாவை காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்ததை சுட்டிக்காட்டும்விதமாக, கர்மாவின் விதி செயல்படுகிறது என்றும், இந்தியா குழப்பத்துக்கு உள்ளாகும் என்று கருதியவர்களுக்கு அமைதியான, ஆனால் வலுவான பதில் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அந்தப் பதிவில் ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago