டெல்லியில் மீண்டும் ‘வெங்காய’ அரசியல் - 532 இடங்களில் சோதனை; 42 பேர் மீது வழக்கு

வெங்காயம் விலை திடீர் உயர்வால், டெல்லியில் அதன் மீது மீண்டும் அரசியல் உருவாகிவிட்டது. இதைத் தொடர்ந்து 532 இடங்களில் சோதனை நடத்தி 42 வியாபா ரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து டெல்லி மாநில உணவுப் பொருள் விநியோகத் துறை ஆணையர் எஸ்.எஸ்.யாதவ் கூறுகையில், “வெங்காயம் பதுக்கல் தொடர்பாக டெல்லி சந்தைகள் மற்றும் முக்கியப் பகுதிகள் என 532 இடங்களில் சோதனை நடத்தினோம். இதில் 42 வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அத்தியாவாசிய உணவுப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும்” என்றார்.

வட இந்தியாவில் நிலவும் கடும் வெயில் காரணமாக டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ஒரு மாதமாக கடும் மின்வெட்டு நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காய்கறி உற்பத்தியும் குறைந்து, டெல்லியின் மொத்த சந்தைகளுக்கு வரும் காய்கறி லாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள வெங்காய மண்டிகளில், தொழிலாளர்கள் தங்கள் கூலியை உயர்த்தக் கோரி கடந்த திங்கள்கிழமை வேலை நிறுத்தம் செய்தனர். இதனால், வெங்காயத்தின் விலை டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் இரு மடங்கானது.

இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி அறிக்கை அளிக்கத் தொடங்கியவுடன் மோடியின் அரசு உஷார் ஆனது. இதற்காக கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரைவை கூடி ஆலோசனை செய்தது.

இதைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இத்துடன் டெல்லியில் 200 முக்கிய இடங்களில் வேன்களில் வைத்து வெங்காயம் விற்க நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வெங்காய விலை கிலோ ரூ.100 வரை உயர்ந்தது. விலையை கட்டுப்படுத்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு மொபைல் வேன்களில் வெங்காயம் விற்பனை செய்தது. இதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்படுகிறது.

டெல்லியில் நடந்த சோதனைகள் குறித்து, ஆசாத்பூர் மொத்த சந்தையின் வியாபாரிகளில் ஒருவரான ரஜேந்தர் சஹானி கூறுகையில், “மே முதல் செப்டம்பர் வரை விளைச்சல் கிடையாது. இதற்காக அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் தேக்கிவைத்து விற்கப் படுகின்றன.

அதுபோல் நாமும் தேக்கி வைத்தால்தான் வரும் நாட்களில் வெங்காயம் கிடைக்கும். வெங்காயத்தின் மீது அடிக்கடி நடத்தப்படும் அரசியல்தான் இதுவும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “வெங்காயம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இல்லை. இதனால் பிடிபட்ட 42 பேர் மீதும் அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது. அவர்களை அரசு எச்சரித்து, விடவேண்டியிருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE