“ஐஎன்எஸ் விக்ராந்த்... நமது உள்நாட்டு சக்தி, வளங்கள், திறமைகளின் சின்னம்” - பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

கொச்சி: "ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு போர்க்கப்பல் மட்டும் இல்லை. அது இந்தியா தன்னிறைவு பெற்றதன் தனித்துவமான பிரதிபலிப்பு. நமது உள்நாட்டு சக்தி, உள்நாட்டு வளங்கள், உள்நாட்டுத் திறமைகளின் சின்னமே இது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் காலனித்துவ காலத்திலிருந்த கடற்படை கொடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை குறிக்கும் வகையில், புதிய கடற்படைக் கொடியை வெளியிட்டு, அதனை சத்ரபதி சிவாஜிக்கு அர்ப்பணித்து ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் பேசியது: “கேரள கடற்கரையில் இந்தியா மற்றும் ஒவ்வொரு இந்தியரும் புதிய வருங்காலத்திற்கான சூரிய உதயத்தை கண்டுகளிக்கின்றனர். விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை கடற்படையில் சேர்ப்பது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவான வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கும் நோக்கத்திற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு சான்றாகும். விக்ராந்த் மிகப் பெரியது, அதிக ஆற்றல் வாய்ந்தது. தனித்துவமானது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மட்டுமல்ல, 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று. இலக்குகள் தூரமாக இருந்தால் பயணமும் நீண்டிருக்கும். அதுபோலவே இங்கு கடல், அதனால் சவால்களும், முடிவில்லாதவைகளாக இருக்கும். இதற்கு தீர்வுதான் விக்ராந்த். இந்தியா தன்னிறைவு பெற்று வருவதை குறிக்கும் விதமாக விக்ராந்த் அமைந்துள்ளது.

இன்றைய இந்தியாவில் எந்தவொரு சவாலும் அதிக கடினமாக இருப்பதில்லை. உலக அரங்கில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய விமானம் தாங்கிய போர்க்கப்பலை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று நாடு முழுவதும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக பணியாற்றிய கப்பற்படை, கொச்சி கப்பல்கட்டும் தளத்தை சேர்ந்த பொறியாளர்கள், விஞ்ஞானிகள் குறிப்பாக இத்திட்டத்திற்காக உழைத்த பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலம் ஏற்பட்ட மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமும் சேர்ந்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்தின் ஒவ்வொரு பகுதியும் திறமை, வலிமை மற்றும் வருங்கால வளர்ச்சிக்கானதை தன்னுள்ளே கொண்டுள்ளது. இந்தியா தன்னிறைவு பெற்றதன் தனித்துவமான பிரதிபலிப்புதான் ஐஎன்எஸ் விக்ராந்த். விமானதளத்தில் பொருத்தப்பட்டுள்ள எஃகு டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மூலம் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.

ஐஎன்எஸ் விக்ராந்த்தை பார்க்கும்போது ஒரு நகரமே மிதந்து செல்வது போல் உள்ளது. அதன் மூலம் ஏற்படும் மின்சக்தியினால் 5,000 வீடுகளுக்கு மின்வசதியை ஏற்படுத்த முடியும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின்வயர்களின் நீளம் கொச்சி முதல் காசி வரை நீண்டு செல்லும் அளவில் உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் செங்கோட்டையில் நான் அறிவித்த ஆயுர்வேதத்தில் உள்ள முக்கியமான ஐந்து வகை ஆற்றல்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் சான்றாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

எதிரிகளை மிரட்டும் வகையில் சத்ரபதி வீர் சிவாஜி மகராஜா கப்பற்படையை கட்டமைத்திருந்தார். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்த போது நம்நாட்டின் கப்பல்கள் மற்றும் அதன் மூலம் நடைபெறும் வர்த்தகம் போன்றவைகள் மூலம் அச்சுறுத்தப்பட்டனர். இதன் விளைவாக நமது கடல்சார் வலிமையை வலுவிழக்க செய்ய முடிவு செய்தனர். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சட்டம் இயற்றி, இந்திய கப்பல்கள் மற்றும் வணிகர்கள் மீது மிகக்கடுமையான தடைகளை விதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வரலாற்றில் இன்று செப்.02, 2022 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அடிமைத்தனத்தின் அடிச்சுவட்டை இந்தியா அகற்றுவதை நன்கு உணர்கிறோம். இந்திய கப்பற்படைக்கு இன்று புதிய கொடி கிடைத்துள்ளது. இந்திய கடற்படையின் கொடியில் இதுவரை அடிமைத்தனத்தின் அடையாளம் இருந்தது. ஆனால் இன்று முதல் சத்ரபதி சிவாஜியின் உத்வேகத்தால் புதிய கடற்படைக் கொடி கடலிலும், வானிலும் பறக்கும்.

விக்ராந்த் நமது கடல்சார் பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும்போது பல பெண் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். கடலின் மகத்தான சக்தியுடன், எல்லையற்ற பெண் சக்தியும் இணைந்து செயலாற்றும்போது, புத்தம் புதிய இந்தியாவின் சிறந்த அடையாளமாக அமையும். தற்பொழுது இந்திய கடற்படையில் அனைத்து துறையிலும் பெண்கள் களம் காணவிருக்கிறார்கள். இதற்கு முன்பு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கடல் அலைகளுக்கு எப்படி கட்டுப்பாடுகள் இல்லையோ, அதுபோலவே இந்நாட்டின் மகள்களுக்கும் கப்பற்படையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

ஒவ்வொரு துளி நீரும் சேர்ந்து, சேர்ந்து சமுத்திரம் உருவாகிறது. அதேபோல ஒவ்வொரு இந்திய குடிமகனும் 'உள்ளூர் மக்களுக்கான குரல்' என்ற மந்திரத்தை பின்பற்ற ஆரம்பித்தால், நாடு தன்னிறைவு பெற அதிக காலம் ஆகாது.

நாடுகளுக்கிடையே நிலவியல் மாற்றம் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் இந்திய - பசிபிக் பகுதி, இந்திய பெருங்கடல் பகுதி போன்றவைகள் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் இந்தப் பகுதிகள் பாதுகாப்பு பணிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டன. தற்போது இந்தப் பகுதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக பட்ஜெட்டில் கடற்படைக்கென கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் விளைவாக இந்தப் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலிமை பெறும். அமைதியான, பாதுகாப்பான உலகிற்கு இந்தியா வழிவகுக்கும்" என்று பிரதமர் கூறினார்.

இந்தவிழாவில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சர்பானந்த சோனாவால், வி முரளீதரன், அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், கடற்படை ஊழியர்களின் தலைவர் ஆர். ஹரிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐ.என்.எஸ். விக்ராந்த்: ராணுவத் துறையில் தற்சார்பை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாக ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட விக்ராந்த், நவீன ரக தானியங்கி அம்சங்களுடன், இந்திய கடல்சார் வரலாற்றில் பிரம்மாண்டமான போர்க்கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது.

1971-ஆம் ஆண்டு போரில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் நினைவாக அதன் பெயரே இந்தப் போர்க்கப்பலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. 100 எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனங்களின் உபகரணங்களையும், இயந்திரங்களையும் விக்ராந்த் போர்க்கப்பல் தன்னகத்தே கொண்டுள்ளது. விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு, நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இயங்கும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்