இடுக்கி - தொடுபுழா நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

By என்.கணேஷ்ராஜ்

போடி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் குடையத்தூர் எனும் இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சோமன் (56) என்பவர் வீடு முழுவதும் சேதமடைந்தது.

அருகில் உள்ளவர்கள் தொடுபுழா தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இடுக்கி ஆட்சியர் ஷீபாஜார்ஜ் தலைமையில் மீட்புப் பணி நடைபெற்றது. தொடர்ந்து மழை பெய்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மோப்ப நாய் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது.

இதில் சோமன், அவரது மனைவி ஷிஜி (50), தாயார் தங்கம்மாள் (72), மகள் ஷிமா (24), அவரது மகன் தேவானந்த் (4) ஆகியோரின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

வருவாய்த் துறை அமைச்சர் ராஜன் நேரில் பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அப்பகுதியில் ஆபத்தான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE