இந்திய ஊடகங்கள் தன்னையே அழித்துக் கொள்ளுமா? தன்னையே அழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறதா? தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறதா? என்று இப்போதைய நிலையில் ஒரு கேள்வியை 3 விதங்களாகக் கேட்கலாம்; நான் மூன்றாவது கேள்வியைத் தேர்வு செய்கிறேன். இதை கேட்பது நமக்குள்ளேயே விவாதிக்க வேண்டும் என்பதற்காக.
இக் கேள்விகளை மேலும் மென்மையாகவும் கேட்கலாம். இந்தியப் பத்திரிகையாளர்களான நாம் எப்போது அரசின் பத்திரிகைத் தொடர்பாளர்களாக மாறினோம்? தாய்நாட்டின் சிப்பாய்களாக மாறினோம்? தேசியப் பாதுகாப்பு போன்றவற்றில் அரசை கேள்வி கேட்கக்கூடாது என்று எப்போதிலிருந்து முடிவு செய்தோம்?
“பாகிஸ்தானுடன் உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) வினோதமான உறவு இருக்கிறது, அது ‘எங்களுக்கு’ தீங்கு விளைவிக்கிறது, உங்களுடைய சொந்த அக்கறைக்காக ‘நாங்கள்’ உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது” என்று அமெரிக்க அதிகாரிகளிடம் பேசுகிறோம். இது தவறுதான் என்று புரியாமல் நாமே அரசின் அங்கமாக மாறிவிட்டோம், அதனால் அரசு செய்வதில் சரி எது தவறு எது என்று, அலசி ஆராய தவறி வருகிறோம் என்கிறேன்.
வெளியுறவு, ராணுவம் தொடர்பான விவகாரங்களில் இந்தியப் பத்திரிகையாளர்கள் அரசின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகிறார்கள் என்று பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள் குறைப்படுவது உண்டு. அது உண்மைதான்; பாகிஸ்தான் அரசின் கொள்கைகளையும் ராணுவத்தின் செயல்களையும் பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள் தங்களுடைய சொந்தப் பெயரிலேயே கட்டுரைகளாகப் பத்திரிகைகளில் துணிச்சலாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களுடன் ராணுவத்துக்குள்ள மோசமான உறவை அவர்கள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. அப்படி கேட்டதாலேயே ராசா ரூமி, ஹுசைன் ஹக்கானி போன்றவர்கள் தலைமறைவாக வாழ நேர்ந்திருக்கிறது. நஜம் சேத்தியைச் சிறைக்கே அனுப்பிவிட்டார்கள்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா ஆயுதமும் கொடுத்து பயிற்சியும் கொடுத்ததை 1984-ல் நான் கட்டுரையாக எழுத, ‘இந்தியா டுடே’ அனுமதித்தது. (சக்திவாய்ந்த தலைவராக இருந்த பிரதமர் இந்திரா காந்தி அதற்காக என்னை ‘தேச விரோதி’ என்று கண்டித்தார்.) இந்திய அமைதி காப்புப் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டதும் அதே போல விமர்சிக்கப்பட்டது. அமிருதசரஸ் பொற்கோவிலில் எடுக்கப்பட்ட ‘நீல நட்சத்திர’ நடவடிக்கை முதல் பஸ்தாரில் துணை நிலை ராணுவப் படைகளை அரசு பயன்படுத்தப்படுவது வரை இந்தியப் பத்திரிகையாளர்களால் விரிவாக விவாதிக்கப்படுகிறது, கேட்கப்படுகிறது. பனிப்போருக்குப் பிந்தைய வெளியுறவுக்கொள்கை கூட விரிவாக அலசப்பட்டிருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு.
“ராணுவ வீரர்கள் அல்லாத 4 பேர், சாதாரண ஆயுதங்களுடன் எல்லா பாதுகாப்பு அரண்களையும் மீறி, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளேயிருந்த ராணுவ முகாமுக்கு எளிதாக வர எப்படி முடிந்தது?” என்று கரண் தாப்பர் என்ற ஒரே பத்திரிகையாளர்தான் கேட்டார். பாதுகாப்பு ஏற்பாட்டில் இருந்த ஓட்டைகளை தரைப்படையில் தளபதியாகப் பணிபுரிந்த லெப். ஜெனரல் ஜே.எஸ்.தில்லான் விரிவாக அலசினார். 1987 அக்டோபரில் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிகேடுக்குத் தலைமை வகித்த அவர், வெகு விரைவாக யாழ்ப்பாண காட்டைக் கடந்து, குறைந்த உயிர்ச் சேதங்களுடன் முக்கிய இடத்துக்குச் சென்று படையை நடத்தினார்.
கார்கில் சம்பவத்துக்குப் பிறகு தான் இந்தியப் பத்திரிகையாளர்களிடம் மன மாறுதல் ஏற்பட்டது என்பேன். கார்கிலில் பாகிஸ்தானியர் ஊடுருவல் குறித்து தகவல்கள் கசிந்து, அதுபற்றி விசாரித்தபோது, ‘அப்படி எதுவுமில்லை’ என்று அரசு 3 வாரங்கள் மறுத்துக் கொண்டேயிருந்தது. ‘நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை’ என்றனர் பாகிஸ்தானியர்கள். ‘அவ்வளவு தூரம் உள்ளே புகுந்து யாரும் ஆக்கிரமிக்கவில்லை’ என்றது இந்திய ராணுவம். மூத்த தளபதிகள் செல்வதற்கு முன்னரே, டெல்லியிருந்து பத்திரிகையாளர்கள் கார்கிலுக்குச் சென்றனர்! ராணுவமும் ஊடகமும் ஒன்றுகலந்த நிகழ்வாக அது மாறியது. ‘நிருபர்களைத் தடுக்காமல் போர்முனைக்கே செல்ல இந்தியா அனுமதித்தது’ என்று இந்தியாவின் மீது உலக அரங்கில் மதிப்பு ஏற்பட்டது. இறுதியாக, ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டப்பட்டதால் எல்லாம் சுபமாக முடிந்தது.
ஆனால் இங்கே ஒரு விஷயத்தை அத்தனை பேரும் கோட்டைவிட்டார்கள். அவ்வளவு பாகிஸ்தானியர்கள் எப்படி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்? அதைக் கண்டுபிடித்து உறுதிப்படுத்த நமக்கு ஏன் அவ்வளவு நாட்கள் பிடித்தன? இப்படி ஆராயத் தவறியதால், கார்கில் சம்பவத்துக்குக் காரணமாக யாருடைய தலையும் உருளவில்லை. உள்ளூர் படைத் தலைவர் பலிகடாவானார், ஆனால் அவரும் ராணுவ நீதிமன்றத்தில் தண்டனையின்றித் தப்பிவிட்டார். ஒரு தவறுக்குக் காரணமாக இருக்கும் அரசியல், ராணுவ நிர்வாகிகளைத் தப்பவிடக்கூடாது.
பத்திரிகையாளர்கள் ராணுவத்துடன் சேர்ந்து போர் முனைக்குச் செல்லலாம், செய்திகளைத் தரலாம். ஆனால் தொலைக்காட்சி ஸ்டூடியோவில் உட்கார்ந்து கொண்டு, பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற ராணுவத் தளபதிகளைப் பார்த்து கத்தி கூச்சலிடக்கூடாது; அவர்கள் அருகில் இல்லை என்ற துணிச்சலில் காட்டமாகப் பேசக்கூடாது.
கசப்பான உண்மைகளைப் பேசும் பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள் சிரில் ஆல்மைடா, ஆயிஷா சித்திக் போல இந்தியாவில் யாரும் இல்லை என்பது உண்மை. தற்கொலைப்படையாய் செயல்படும் இந்தியப் பத்திரிகையாளர்கள் காட்சி ஊடகத்தில்தான் அதிகம் இருக்கின்றனர்.
இவ்வளவும் எழுதுவதற்குக் காரணமே உரி என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலும் அதன் எதிர் விளைவும்தான். உண்மையில் 3 வாரங்களுக்கு முன்னால் என்னதான் நடந்தது என்று யாராலுமே சொல்ல முடியவில்லை. ரகசியங்களை மறைப்பதில் இந்திய அரசு கைதேர்ந்துவிட்டதா அல்லது இந்தியப் பத்திரிகையாளர்கள் உண்மைகளைத் தேடுவதை நிறுத்திவிட்டார்களா? இதழியியல் பயில சேரும்போதே மாணவர்களுக்குச் சொல்லித் தரும் முதல் பாடம், “அரசாங்கம் உண்மைகளை மறைக்கும் நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்பது. நாமோ அப்படிச் செய்யாமல், அரசு பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். “நமக்கு எதிர்ப்புறத்தில் இருப்பது நம்முடைய எதிரி என்பதால் நீங்கள் (அரசு) சொல்வதையும் நம்புகிறோம், சொல்லாததையும் நம்புவோம்” என்று அறிவிக்கத் தயாராக இருக்கிறோம். இன்னொரு தரப்பார் சொல்கிறார்கள், “நீங்கள் கூறுவதை ஒன்றுகூட நம்பமாட்டோம், எல்லாவற்றுக்கும் வீடியோ ஆதாரம் கொடுத்தால்தான் நம்புவோம்” என்று. இந்திய ஊடகங்கள் தன்னையே அழித்துக் கொள்கின்றன என்று ஏன் சொல்கிறேன் என்று இப்போது புரிகிறதா?
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
முக்கிய செய்திகள்
இந்தியா
51 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago