சிறுதானிய தின்பண்டங்களுடன் சமூக ஊடகங்களில் செல்ஃபி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பண்டிகைகளுக்கான தின்பண்டங்களில் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துவோம். சிறுதானிய தின்பண்டங்களுடன் செல்ஃபி எடுத்துப் பகிருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வாயிலாக மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்.

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 28) அவர் 91வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது அவர், "அசாமின் போங்காயி கிராமத்திலே ஒரு சுவாரசியமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது ப்ராஜெக்ட் சம்பூர்ணம். இந்தத் திட்டத்தின் பொருள் என்னவென்றால் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டம் மற்றும் இந்தப் போராட்டத்தின் வழிமுறையுமே மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை.

இதன்படி, ஒரு அங்கன்வாடி மையத்தில் ஒரு ஆரோக்கியமான குழந்தையின் தாய், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தையின் தாய் ஒருவரை, ஒவ்வொரு வாரமும் சந்தித்து, ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான அனைத்துத் தகவல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள்.

அதாவது ஒரு தாய், பிறிதொரு தாயின் நண்பராகி, அவருக்கு உதவுகிறார், கற்பிக்கிறார். இந்தத் திட்டத்தின் உதவியால், இந்தப் பகுதியில் ஓராண்டிலே, 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு தொலைந்து விட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்க பாடல்கள்-இசை, பஜனைப்பாடல்கள் கூட பயனாகும் என்பதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா?

மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் என்னுடைய குழந்தை இயக்கம் செயல்படுகிறது. இந்த என்னுடைய குழந்தை இயக்கத்திலே இது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் பஜனைப் பாடல்கள்-கீர்த்தனைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, இதிலே ஊட்டச்சத்து குரு என்று அழைக்கப்படும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டார்கள்.

மட்கா நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, இதிலே பெண்கள், அங்கன்வாடி மையத்திற்காக கை நிறைய தானியங்களைக் கொண்டு வருவார்கள், இந்த தானியத்தால் சனிக்கிழமைகளில் பால்போஜுக்கு, அதாவது குழந்தைகளுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்வார்கள். இதனால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அதிகரிப்பதோடு, ஊட்டச்சத்துக் குறைபாடும் குறைந்திருக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட வேண்டி, ஒரு பிரத்யேகமான இயக்கம் ஜார்க்கண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜார்க்கண்டின் கிரிடீஹிலே பாம்பும் ஏணியும் என்ற வித்தியாசமான பரமபத விளையாட்டு உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டின் வாயிலாகப் பிள்ளைகள், நல்ல மற்றும் தீய பழக்கங்களைப் பற்றிக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு தொடர்புடைய இத்தனை புதிய முயற்சிகள் குறித்து நான் ஏன் உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றால், நாமனைவருமே கூட வரவிருக்கும் மாதங்களில் இந்த இயக்கத்தோடு இணைய வேண்டும்.

செப்டம்பர் மாதமானது பண்டிகைகளோடு கூடவே ஊட்டச்சத்தோடு தொடர்புடைய இயக்கங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நாம் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தை ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கிறோம்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக தேசத்தின் பல படைப்பாற்றலுடன், பன்முகமான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடு, மக்கள் பங்களிப்பு ஆகியன ஊட்டச்சத்து இயக்கத்தின் மகத்துவமான பகுதியாக ஆகியிருக்கிறது. தேசத்தின் லட்சக்கணக்கான அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு மொபைல் கருவிகள் அளிப்பது தொடங்கி ங்கன்வாடி சேவைகள் சென்று சேர்வதை கண்காணிப்பதற்காக Poshan Tracker என்ற ஊட்டச்சத்து கண்காணிப்பாளர் செயலியும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

முன்னேற விரும்பும் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் 14 முதல் 18 வயதுடைய பெண் குழந்தைகளும் ஊட்டச்சத்து இயக்கத்திலே இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்சினையைக் களையெடுப்பது இந்த முயற்சிகளோடு நின்று போகவில்லை. இந்தப் போராட்டத்திலே மற்ற பிற முயற்சிகளுக்கும் முக்கியமான பங்கிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஜல்ஜீவன் இயக்கத்தையே எடுத்துக் கொள்வோமே! பாரதத்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து விடுவிக்க இந்த இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுச் சவால்களை எதிர்கொள்ள, சமூக விழிப்புணர்வோடு இணைந்த முயற்சிகள் மகத்துவமான பங்களிப்பை ஆற்றுகின்றன. நீங்கள் அனைவரும் வரவிருக்கும் ஊட்டசத்து மாதங்களில், ஊட்டசத்துக் குறைபாட்டைக் களையும் முயற்சிகளில் கண்டிப்பாகப் பங்காற்றுங்கள் என்று நான் உங்களனைவரிடத்திலும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

சென்னை பெண்ணுக்கு பாராட்டு: சென்னையிலிருந்து ஸ்ரீதேவி வரதராஜன் அவர்கள் எனக்கு ஒரு நினைவூட்டல் செய்தியை அனுப்பி இருக்கிறார். மைகவ் தளத்திலே தனது கருத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்! “புத்தாண்டு பிறக்க இன்னும் 5 மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சி இருக்கிறது; வரவிருக்கும் புத்தாண்டு International Year of Millets, அதாவது சர்வதேச சிறுதானிய ஆண்டு என்ற வகையிலே நாம் கொண்டாட இருக்கிறோம்” என்று தெரிவித்து, தேசத்தின் சிறுதானிய வரைபடம் ஒன்றை எனக்கு அனுப்பி இருக்கிறார். இது கூடவே, நீங்கள் மனதின் குரலின் வரவிருக்கும் பகுதியில், இது பற்றிப் பேசுவீர்களா என்றும் வினா எழுப்பியிருக்கிறார்.

நாட்டுமக்களின் இத்தகைய ஆர்வங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையானது, 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து, ஒரு முன்மொழிவை நிறைவேற்றியது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.பாரதத்தின் இந்த முன்மொழிவிற்கு 70ற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்தது.

சிறுதானிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்: இன்று உலகெங்கிலும் இதே சிறுதானியங்களின் மீதான பேரார்வம் அதிகரித்து வருகிறது. நாம் சிறுதானியங்கள் பற்றிப் பேசும் போது, எனது ஒரு முயற்சியையும் கூட இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த சில காலமாகவே நாட்டிற்கு எந்த ஒரு அயல்நாட்டு விருந்தினர் வந்தாலும், குடியரசுத்தலைவர் வந்தாலும், உணவிலே இந்தியாவின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை அவர்களுக்கு உண்ண அளிக்க முயற்சிக்கிறேன். இதிலே என்னுடைய அனுபவம் என்னவாக இருக்கிறது என்றால், இந்த முக்கியஸ்தர்களுக்கு இந்தப் பதார்த்தங்கள் மிகவும் பிடித்துப் போய் விடுகின்றன, நமது சிறுதானியங்கள் பற்றிய பல தகவல்களைத் திரட்டவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

சிறுதானியங்கள் என்பவை பண்டைய காலம் தொட்டே நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக இருந்து வருகின்றன. நமது வேதங்களிலே சிறுதானியங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதைப் போலவே புறநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தேசத்தின் எந்த ஒரு பாகத்திற்குச் சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும். நமது கலாச்சாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் கூட பலவகைகள் காணக் கிடைக்கின்றன.

வரகு, சோளம், சாமை, ராகி, கம்பு, தினை, குதிரைவாலி போன்றவை சிறுதானியங்கள் இல்லையா! பாரதம் உலகிலேயே சிறுதானியங்களின் பெரிய ஏற்றுமதியாளர்; ஆகையால் இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்ய பெரும் பொறுப்பு பாரத நாட்டவரான நம் அனைவரின் தோள்களிலும் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும், நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.

சூப்பர் உணவு: சிறுதானியங்கள் என்பன விவசாயிகளுக்கும் அதிக லாபகரமானது, அதுவும் சிறப்பாக சிறிய விவசாயிகளுக்கு என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். உள்ளபடியே மிகக் குறைந்த நேரத்தில் அறுவடைக்கு இவை தயாராகி விடும், அதுவும் இதற்கு நீருக்கான தேவையும் அதிகம் இருக்காது. நமது சிறிய விவசாயிகளுக்கு, சிறுதானியங்கள் குறிப்பாக ஆதாயமளிப்பவை.

சிறுதானியங்களின் காய்ந்த தழைகள் மிகச் சிறப்பான தீவனமாகவும் கருதப்படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவுமுறை தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்த்தால், சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து ஆகியன நிறைவான அளவில் இருக்கின்றன. பலர் இதை சூப்பர் உணவு என்றும் கூறுகிறார்கள்.

சிறுதானியங்களில் ஒன்றல்ல, பல ஆதாயங்கள் இருக்கின்றன. உடல் பருமனைக் குறைப்பதாகட்டும், நீரிழிவாகட்டும், உயர் இரத்த அழுத்தமோ, இருதயம் தொடர்பான நோய்கள் அபாயமாகட்டும், இவற்றைக் குறைக்கிறது. இதோடு கூடவே, வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. சற்று முன்பு தான் நாம் ஊட்டச்சத்துக் குறைவு பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

அதிக அளவில் பயிர் செய்யுங்கள்: ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு போராடவும் சிறுதானியங்கள் கணிசமான உதவி புரிகின்றன, ஏனென்றால், இவை புரதங்களோடு கூடவே உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றன. தேசத்திலே இன்று சிறுதானியங்களுக்கு ஊக்கம் அளிக்க, நிறைய விஷயங்கள் செய்யப்படுகின்றன. இவற்றோடு தொடர்புடைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு, விவசாயிகள்-உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக விளைச்சலை அதிகரிக்க முடியும். என்னுடைய விவசாய சகோதர சகோரிகளிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், சிறுதானியங்களை நீங்கள் அதிக அளவு பயிர் செய்ய வேண்டும், இதனால் ஆதாயம் பெற வேண்டும் என்பது தான். இன்று பல ஸ்டார்ட் அப்புகளும் கூட, சிறுதானியங்கள் துறையில் பணி புரிவதைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவற்றிலே சிலர் சிறுதானிய குக்கீஸ், சிறுதானிய பேன் கேக்குகள், சிறுதானிய தோசை கூடத் தயாரிக்கிறார்கள். அதே போல, சிறுதானிய சக்தி வில்லைகளும், சிறுதானிய காலை உணவும் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்தத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுதானிய தின்பண்டங்களுடன் செல்ஃபி: பண்டிகைகளுக்கான இந்த வேளையில் நாம் நமது பல தின்பண்டங்களிலும் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களின் படங்களை சமூக ஊடகங்களில் நீங்கள் கண்டிப்பாகப் பகிருங்கள்; மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்