காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன்? - குலாம் நபி ஆசாத்தின் 5 பக்க கடிதம் விரிவாக...

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஐந்து பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1953 ஆகஸ்ட் 8-ம் தேதி ஷேக் முகமது அப்துல்லா கைது செய்யப்பட்டார். அப்போது காஷ்மீரில் காங்கிரஸுக்கு நன்மதிப்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் கடந்த 1970 -ம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்தேன்.

சுதந்திர போராட்ட காலத்தில் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். மறைந்த சஞ்சய் காந்தி வலியுறுத்தியதால் கடந்த 1975-76-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் இளைஞர் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்றேன்.

கட்சி பொறுப்புகள்

கடந்த 1977-ம் ஆண்டு முதல் அப்போதைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தியின் வழிகாட்டுதலில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைகளில் அடைக்கப்பட்டேன். இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் பேரணி நடத்தினோம். அப்போது நானும் கைது செய்யப்பட்டேன். கடந்த 1978 டிசம்பர் 20 முதல் 1979 ஜனவரி இறுதி வரை மிக நீண்டகாலம் டெல்லி திகார் சிறையில் இருந்தேன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தொடங்கிய இந்திய தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தேன். ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் கடந்த 1980-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

கடந்த 1980 -ம் ஆண்டில் சஞ்சய் காந்தி மரணம் அடைந்தார். அதன்பிறகு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவியேற்றேன். சஞ்சயின் முதல் நினைவு நாளில் உங்கள் (சோனியா) கணவர் மறைந்த ராஜீவ் காந்தியை இளைஞர் காங்கிரஸில் தேசிய கவுன்சில் உறுப்பினராக சேர்த்தேன். இதைத் தொடர்ந்து 1981 டிசம்பர் 29, 30-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக ராஜீவ் காந்தி பதவியேற்றார்.

கடந்த 1982 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் அரசுகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றிய பெருமை எனக்குக் கிடைத்தது. கடந்த 1980-ம் ஆண்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தேன். ராஜீவ் காந்தி உயிரிழக்கும்வரை காங்கிரஸ் ஆட்சி மன்ற குழுவின் உறுப்பினராக இருந்தேன்.

சோனியாவுக்கு பாராட்டு

காங்கிரஸ் காரிய கமிட்டியில் 40 ஆண்டுகள் உறுப்பினராக பதவி வகித்தேன். கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களின் பொறுப்பாளராக பணியாற்றி உள்ளேன். நான் பொறுப்பாளராக பணியாற்றிய மாநிலங்களில் 90 சதவீத அளவுக்கு காங்கிரஸுக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளேன்.

மாநிலங்களவையில் 7 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டேன். எனது இளவயது முதல் காங்கிரஸுக்காக சேவையாற்றினேன். எனது உடல்நலம், குடும்பத்தை மறந்து கட்சிக்காக பணியாற்றினேன்.

காங்கிரஸ் தலைவராக நீங்கள் (சோனியா) திறம்பட செயல்பட்டீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சி நடத்தியது. அதற்கு காரணம் நீங்கள். மூத்த தலைவர்களின் ஆலோசனையின்படி நீங்கள் செயல்பட்டீர்கள்.

ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு

கடந்த 2013 ஜனவரியில் காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தியை நீங்கள் நியமித்தீர்கள். அரசியலில் அவர் கால் பதித்தது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். அவர் பதவியேற்ற பிறகு கலந்தாலோசித்து முடிவு எடுக்கும் முறையை முற்றிலுமாக சீரழித்தார். கட்சியின் மூத்த தலைவர்களை முழுமையாக ஓரம் கட்டினார். அனுபவம் இல்லாதவர்களையும், துதிபாடிகளையும் வைத்து கட்சியை நடத்தி வருகிறார்.

ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மைக்கு மிக முக்கிய உதாரணத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்ட நகலை செய்தியாளர்களின் முன்னிலையில் அவர் கிழித்தெறிந்தார். காங்கிரஸ் உயர்நிலைக் குழு பரிசீலித்து, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த சட்டத்தை ராகுல் கிழித்து எறிந்தார். அவரது குழந்தைதனமான நடவடிக்கை பிரதமரின் அதிகாரம், மத்திய அரசின் மாண்பை சீர்குலைத்தது. இதன்காரணமாகவே கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியை தழுவியது.

கிடப்பில் பரிந்துரைகள்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சீதாராம் கேசரி நீக்கப்பட்டு நீங்கள் தலைவர் பதவியை ஏற்ற பிறகு 1998 முதல் 2013 வரை 3 முறை காங்கிரஸ் தலைவர்களின் தீவிர ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கான விரிவான செயல்திட்டத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனையோடு உருவாக்கி 2013-ல் ஜெய்ப்பூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பரிந்துரையாக அளித்தேன். காங்கிரஸ் காரிய கமிட்டியால் ஏற்கப்பட்ட இந்த பரிந்துரையை 2014மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முறையாக, படிப்படியாக செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால்கடந்த 9 ஆண்டுகளாக இந்தப் பரிந்துரை கிடப்பில் உள்ளது. உங்களிடமும் ராகுல் காந்தியிடமும் இவற்றை செயல்படுத்தும்படி பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். ஆனால், இவற்றை பரிசீலிக்கக்கூட முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த 2014-ல் உங்களது தலைமையிலும் கடந்த 2019-ல் ராகுல் காந்தி தலைமையிலிலும் இரு மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. கடந்த 2014 முதல் 2022 வரை நடைபெற்ற 49 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 39 தேர்தல்களில் கட்சி தோல்வி அடைந்துள்ளது. 4 தேர்தல்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. 6 முறை கூட்டணி முறையில் ஆட்சியில் பங்கேற்றது. இப்போது 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. இன்னும் இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் சிறிய கூட்டாளியாக உள்ளது.

கடந்த 2019க்கு பிறகு காங்கிரஸில் ஏற்பட்ட நிலைமை மிகவும் மோசமானது. விரிவாக்கப்பட்ட காரிய கமிட்டியில் கட்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மூத்த தலைவர்களை அவமதித்துவிட்டு தனது தலைவர் பதவியில் இருந்து அவசரகதியில் விலகினார் ராகுல் காந்தி. இந்தக் கூட்டத்தில்தான் நீங்கள் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக பதவியில் தொடர்கிறீர்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அமைப்பு சார்ந்த உறுதியை சீரழித்த ரிமோட் கண்ட்ரோல் மாடல், தற்போது காங்கிரஸ் கட்சியில் செயல்படுத்தப்படுகிறது. ராகுல் காந்தியாலும், அவரது பாதுகாவலர்கள், அவரது உதவியாளர்கள், துதிபாடிகளால் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கு நீங்கள் ஒரு முகமாக இருக்கிறீர்கள்.

கடந்த 2020 ஆகஸ்டில் நானும், 22மூத்த தலைவர்களும் கட்சி பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பது குறித்துகடிதம் எழுதி கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தோம்.அப்போது கட்சியைகட்டுப்படுத்தும் கும்பல், கொடூரமான முறையில் எங்களைத் தாக்கியது, அவமதித்தது, அந்த கும்பலின் வழிகாட்டுதலின்படி ஜம்முவில் என்னுடைய மாதிரி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இந்த இறுதிச் சடங்கை நடத்தியவர்கள் டெல்லியில் கட்சியின் பொதுச் செயலாளர்களாலும், ராகுல் காந்தியாலும் பாராட்டப்பட்டனர். உங்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் உங்களுக்காக வாதாடிய முன்னாள் அமைச்சர் கபில் சிபல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

உங்களுக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களும் செய்த தவறு கட்சியின் பலவீனத்துக்கான காரணத்தையும்,தீர்வையும் சுட்டிக்காட்டியதுதான். அந்த கருத்துகளை ஆக்கப்பூர்வமாக, ஒருங்கிணைந்த முறையில் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்வதற்கு பதில் நாங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டோம். அவமதிக்கப்பட்டோம், அவதூறுக்கு உள்ளானோம். மீளமுடியாத இடத்துக்கு காங்கிரஸ் சென்றிருக்கிறது. முகமூடிகளாகசெயல்படுவோர் கட்சித் தலைமைக்கு உயர்த்தப்பட்டதே இதற்கு காரணம்.

இந்த சூழலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுகிற ஒருவர், கைப்பாவை போலவே இருக்க முடியும். தேசிய அளவில் பாஜகவும் மாநில அளவில் பிராந்திய கட்சிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. எதிலும் ஆர்வம் காட்டாத தனிநபர் ஒருவரின் (ராகுல் காந்தி)கையில் கடந்த 8 ஆண்டுகளாக கட்சியின் தலைமை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதுவே காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணம்.

உட்கட்சித் தேர்தல் கேலிக்கூத்தாகிவிட்டது. கட்சியின் எந்த நிலையிலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் தேர்தல் நடக்கவில்லை. டெல்லியில் இருந்து கட்சியைக் கட்டுப்படுத்தும் கும்பல் தயாரிக்கும் பட்டியல்களில் சில அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களிடம் நெருக்குதல் செய்து கையெழுத்து பெறுகிறார்கள்.

50 ஆண்டு உறவு முறிவு

ஒரு காலத்தில் நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நடத்திய இயக்கமான காங்கிரஸை யார் கட்டுப்படுத்துவது என்பதில் மோசடிநடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையே இதற்குப் பொறுப்பு. 75-வது சுதந்திர தின நிறைவு விழாவில் காங்கிரஸுக்கு இந்த நிலைமை தேவையா என்ற கேள்வியை கட்சித் தலைமை கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்திரா காந்தி காலம் தொடங்கி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில்உங்கள் குடும்பத்தோடு தனிப்பட்ட உறவுடன் உள்ளவன் நான். அந்த அடிப் படையில் உங்கள் துன்ப துயரங்களில் தனிப்பட்ட முறையில் அக்கறை உள்ளவன். அது எப்போதும் தொடரும்.நானும் என்னுடன் கட்சியில் பணியாற்றிய சிலரும், எந்த லட்சியங்களுக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டோமோ அவற்றுக்காக காங்கிரஸுக்கு வெளியே இருந்து பாடுபடுவோம். இந்தியாவை இணைப்போம் யாத்திரையை மேற்கொள்வதற்கு முன்பாக கட்சித் தலைமை, காங்கிரஸை இணைப்போம் யாத்திரையை மேற்கொள்வது நல்லது. காங்கிரஸ் உடனான 50 ஆண்டு உறவை முடித்துக்கொள்கிறேன். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஜி 23 தலைவர்கள் யார்?

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் ஜி23 தலைவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பூபிந்தர் சிங் ஹூடா, மிலிந்த் தியோரா, முகுல் வாஸ்னிக், மணீஷ் திவாரி,சசி தரூர், ராஜிந்தர் கவுர், வீரப்ப மொய்லி, பிருத்விராஜ் சவாண், கபில் சிபல், விவேக் தன்கா, ஜிதின் பிரசாத், ரேணுகா சவுத்ரி, பி.கே.குரியன், ராஜ் பப்பர், குல்தீப் சர்மா, யோகானந்த் சாஸ்திரி, அகிலேஷ் பிரசாத் சிங், அரவிந்தர் சிங் லவ்லி, கவுல் சிங் தாக்குர், அஜய் சிங், சந்தீப் தீக்சித் ஆகியோர் ஜி23 தலைவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இதில் பலர் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்