ஆயிரம் சோதனை நடந்தாலும் சிபிஐ.க்கு எதுவும் கிடைக்காது - மணிஷ் சிசோடியா திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிபிஐ ஆயிரம் சோதனை நடத்தினாலும் குற்றச்சாட்டு தொடர்பாக எதுவும் கண்டுபிடிக்க முடியாது என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறினார்.

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் தன் மீதான புகார்களை சிசோடியா மறுத்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் மணிஷ் சிசோடியா நேற்று பேசியதாவது: இப்போது வாபஸ் பெறப்பட்டுள்ள கலால் கொள்கையை அமல்படுத்தியது தொடர்பாக என் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (என்ஐஆர்) போலியானது. சிபிஐ ஆயிரம் சோதனை நடத்தினாலும் குற்றச்சாட்டு தொடர்பாக எதுவும் கண்டுபிடிக்க முடியாது.

பாஜக விருப்பப்படி சிபிஐ செயல்படுகிறது. ஆம் ஆத்மி அரசுகளின் செயல்பாடுகளால் குறிப்பாக கல்வித் துறையின் செயல்பாடுகளால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.

குடிமக்கள் மீது கூடுதல் நிதிச்சுமை சுமத்தப்படாத நிலையில் உரிமக் கட்டணமாக அரசுக்கு கூடுதல் வருமானம் வந்துள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டின் முதல் ஊழல் வழக்கு இதுவாகும். சிபிஐ தலைமை அலுவலகம், பாஜக தலைமை அலுவலகமாக மாறியுள்ளது. இந்த ஊழலுக்கு பாஜக தலைவர்கள் பல புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதிகாரிகள் 14 மணி நேரம் அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது என்னிடம் போன் இல்லை. வாட்ஸ் அப் எண் கூட இல்லை. எனது தொலைபேசி முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மணிஷ் சிசோடியா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE