ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்களுக்கு தடை - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

By என்.மகேஷ்குமார்

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்கள்வைக்க உடனடி தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். வரும் 2027-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தடை செய்த மாநிலமாக ஆந்திரா இருக்கும் என அவர் உறுதி அளித்தார்.

ஆந்திர மாநிலத்தில் கடலில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய பிரபல பார்லே நிறுவனத்துடன் நேற்று ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இந்நிகழ்ச்சி யில் கலந்துக்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது, திருமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து திருப்பதி நகரிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்து அதனை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதற்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருவதால், அங்கு நீர், காற்றில் ஏற்படும் மாசு குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் பிளாஸ்ட் பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, பிளாஸ்டிக் பேனர்கள் வைக்க ஆந்திர அரசுதடை விதிக்கிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் பேனர்களுக்கு பதில், துணிகளில் பேனர்கள் வைக்கலாம். வரும் 2027-ம் ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் உபயோகிக்காத மாநிலமாக ஆந்திரா உருவாக வேண்டும். இது வருங்கால தலைமுறைகளுக்கு நாம் கொடுக்கும் பரிசாக இருக்க வேண்டும். அவர்களின் உடல் நலனில் நாம் அக்கறை கொள்வது அவசியமாகும்.

தற்போது கடலில் 40 கி.மீ தூரம் வரை பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இதனால் மீன்கள் உட்பட பல கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனை மீட்கவே பார்லே நிறுவனத்திற்கு, கடல் கழிவுகளை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படி அகற்றப்படும் கழிவுகளை கொண்டு மறு சுழற்சி மூலம் அடிடாஸ், அமெரிக்கா எக்ஸ்பிரஸ், மெர்ஸிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்க விற்கப்படும். இதற்கான ஒப்பந்தம் தற்போது நடந்தது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு ஆண்டிற்கு ரூ. 16 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். இதில் அமைச்சர்கள், பார்லே நிறுவன நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE