“புத்தர் தான் முதல் புரட்சியாளர், முதல் பகுத்தறிவாளர்” - ஜேஎன்யூ துணை வேந்தர் உரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “எந்தக் கடவுளுமே பிராமணர் அல்ல; எல்லாப் பெண்களுமே சூத்திரர்கள் தான். புத்த மதமே சிறந்த மதம். புத்தர்தான் முதல் புரட்சியாளர், முதல் பகுத்தறிவுவாதி” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் பேசியுள்ளார்.

மத்திய சமூகநலத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடந்த பி.ஆர்.அம்பேத்கர் தொடர் கருத்தரங்கத்தில் பேசியபோது துலிபுடி பண்டிட் இதனைக் கூறியுள்ளார். அவர் பேசிய தலைப்பு: பாலின சமத்துவ நீதி மீது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பார்வை: பொது சிவில் சட்டத்தை அறிதல்.

பண்டிட் பேசியதாவது: “மானுடவியல் ரீதியாக, அறிவியல் ரீதியாக... நமது கடவுளரின் தோற்றத்தை உற்றுப் பாருங்கள். நம் கடவுளரில் யாருமே பிராமணர் அல்ல. அதிகபட்சமாக சத்ரியராக இருப்பார்கள். அதிலும் சிவன் நிச்சயமாக பட்டியலினத்தவராகவோ அல்லது பழங்குடி இனத்தவராகத் தான் இருக்க வேண்டும். அவர் சுடுகாட்டில் கழுத்தில் பாம்புடன் இருக்கிறார். அவருக்கு குறைந்தபட்ச ஆடைதான் அணிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பிராமணரால் சுடுகாட்டில் இருக்க முடியாதுதானே. ஆகையால் மானுடவியல் ரீதியாக கடவுள் யாருமே உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. மகாலக்‌ஷ்மியும் அப்படித்தான், சக்தியும் அப்படித்தான். நம் ஜகநாதரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பழங்குடியைச் சேர்ந்தவர். அப்புறம் ஏன் இத்தனைப் பாகுபாடுகள். கொஞ்சமும் மனிதம் இல்லாத பாகுபாடுகள் எதற்காக?

மனுஸ்மிருதி என்னச் சொல்கிறது. எல்லா பெண்களும் சூத்திரர்கள் என்றுதான் சொல்கிறது. எந்தப் பெண்ணும் தன்னை பிராமணப் பெண் என்று கூறிக் கொள்ள முடியாது. பிறப்பால் தந்தை மூலமாகவோ அல்லது திருமணத்தால் கணவன் வாயிலாகவோ தான் அவளால் சாதியைப் பெற முடிகிறது. இது மிதமிஞ்சிய அளவிலான அடக்குமுறை.

நிறைய பேர் சாதி பிறப்பால் வருவதில்லை எனக் கூறுகின்றனர். ஆனால், இன்று சாதி பிறப்பால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பிராமணரோ அல்லது வேறு சாதியினரோ ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தால் அவர் தலித் ஆகிவிடுவாரா? இல்லை தானே!

இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால், அண்மையில் ராஜஸ்தானில் ஒரு பட்டியலினச் சிறுவன், உயர் சாதியைச் சேர்ந்த ஆசிரியர் தண்ணீர் அருந்தும் பானையை தொட்டதற்காகவே அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான். அச்சிறுவன் தண்ணீரை அந்தப் பானையில் இருந்து அருந்தவில்லை. தண்ணீரை தொட்டதற்காகவே அடித்துக் கொலை செய்யப்பட்டார். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இவை மனித உரிமை பிரச்சினை. நம் சக மனிதரை எப்படி நாம் இதுபோன்று நடத்த முடியும்.

இந்திய சமூகம் மேம்பட வேண்டும் என்றால் அம்பேத்கர் கூறியதுபோல் சாதி ஒழிப்பு அவசியம். நாம் ஏன் சாதிய அடையாளத்தை உணர்வுபூர்வமாக்கி வைத்துள்ளோம் என்பது எனக்குப் புரியவில்லை. இந்த சாதிய அடையாளம் சமத்துவம் அற்றது, பாகுபாடு நிறைந்தது. நாம் ஏன் அதனை சுமக்க வேண்டும். இந்த சாதிய அடையாளத்தை பாதுகாக்க நாம் கொலை செய்யக் கூட தயங்குவதில்லை. இத்தனைக்கும் இது செயற்கையாக கட்டமைக்கப்பட்ட அடையாளம்.

நீங்கள் பெண்ணாக இருந்து அதுவும் நீங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் நீங்கள் இரண்டு முறை ஒடுக்கப்பட்டவராகிறீர்கள். முதலில் நீங்கள் பெண் என்பதாலும், அடுத்ததாக நீங்கள் சார்ந்த சாதியாலும் ஒடுக்கப்படுகிறீர்கள்.

அந்த வகையில் புத்த மதம் மிகச் சிறந்த மதம் என நான் கருதுகிறேன். அது கருத்து வேறுபாடுகள், வேற்றுமைகள், வித்தியாசங்களை ஏற்றுக் கொள்கிறது. பார்ப்பனத்துவ இந்துத்துவத்தை எதிர்த்த முதல் போராளி கவுதம புத்தர்தான். வரலாற்றில் அவர்தான் முதல் பகுத்தறிவுவாதி என்பதையும் அறியுங்கள். பி.ஆர்.அம்பேத்கர் நமக்கான ஒரு பாரம்பரியத்தை மீட்டெடுத்துக் கொடுத்துள்ளார்” என்று அவர் பேசினார்.

ஜேஎன்யூ துணை வேந்தர் துலிபுடி பண்டிட் முன்னதாக சாவித்ரி பூலே பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை பேராசிரியராக இருந்தார். அவருக்கு தெலுங்கு, தமிழ், மராத்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் என பல மொழிகள் தெரியும். கடந்த பிப்ரவரி மாதம் ஜேஎன்யு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியில் இருப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE