உ.பி. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை: மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் அமளி

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறி மாநிலங்களவையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை பிரச்சினை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.இதனால் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இரண்டாவது நாளாக மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு கூடியது. திங்கள்கிழமை குடியரசு தலைவர் ஆற்றிய உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள், உத்தரப் பிரதேசத்தில் பதான்யூவில் இரு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நொய்டாவில் பாஜக தலைவர் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என ஹமீது அன்சாரியிடம் கோரிக்கை எழுப்பினர்.

இதற்கு முறையான முன் அனுமதி பெறவில்லை என அன்சாரி தெரிவித்து, விவாதிக்க அனுமதிக்கவில்லை. இதனால் இருக்கைகளில் இருந்து எழுந்த எம்.பி.க்கள், மாநிலங்களவைத் தலைவர் இருக்கை அருகே வந்து நின்று உ.பி. மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர்.

இதற்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் எதிர்கோஷம் எழுப்பியதால் சபையில் சிறிது நேரம் அமளி நிலவியது. இருக்கையில் போய் அமருமாறு சமாஜ்வாதி எம்.பி.க்களை அன்சாரி தொடர்ந்து கேட்டுக் கொண்டார். எனினும் அவர்கள் இருக்கைக்கு திரும்பவில்லை. இதையடுத்து, வேறுவழியின்றி அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பத்து நிமிடங்களுக்கு பின் அவை மீண்டும் கூடியது. பகுஜன்சமாஜ் எம்.பி.க்கள் அக்கட்சித் தலைவர் மாயாவதி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, ‘உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் மோசமாகி விட்டது. எனவே, மத்திய அரசு தலையிட்டு உடனடியாக குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பதான்யூ பலாத்கார சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோர இருப்பதாக மாநில அரசு உறுதி கூறிவிட்டு, அது தொடர்பாக இன்னும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்காமல் உள்ளது’ என்று புகார் கூறினார்.

உத்தரப் பிரதேச எதிர்கட்சியான பகுஜன்சமாஜ் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. எனவே, மாநிலங்களவையில் மட்டுமே பிரச்சினைகளை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE