பாட்னா திரும்பிய லாலுவுடன் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு

By செய்திப்பிரிவு

பாட்னா: டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் மாலை பாட்னா திரும்பிய ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவை முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

பிஹாரில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் அண்மையில் முறித்துக் கொண்டார். லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட கட்சி களுடன் சேர்ந்து, புதிய அரசின் முதல்வராக கடந்த 10-ம் தேதி பதவியேற்றார். லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை கடந்த 16–ம் தேதி விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்சினை களுக்காக டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று முன்தினம் மாலை பாட்னா திரும்பினார். இதையடுத்து லாலுவின் வீட்டுக்கு முதல்வர் நிதிஷ் குமார் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

ஆர்ஜேடி உடன் சேர்ந்து பிஹாரில் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக லாலுவை முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்துள்ளார். மேலும் சுமார் 5 ஆண்டு கால மனக்கசப்புக்கு பிறகு இரு தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு நிதிஷ் குமார், “நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்தவர்கள். எங்களுக்குள் பழைய உறவு இருக்கிறது. இது புதியது அல்ல” என்றார்.

லாலுவை நிதிஷ் குமார் சந்தித்தது தொடர்பான புகைப் படங்களை ட்விட்டரில் தேஜஸ்வி யாதவ் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் தேஜஸ்வியுடன் அவரது தாயும் முன்னாள் முதல் வருமான ராப்ரி தேவி, சகோதரர் தேஜ் பிரதாபும் உள்ளனர்.

இந்நிலையில் கூட்டணியை முறித்தது தொடர்பாக பாஜகவின் விமர்சனத்துக்கு நிதிஷ் குமார் பதில் அளிக்கும் போது, “மனதில் தோன்றும் அனைத்தையும் இனி அவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை ஒரு பொருட்டாக கருதப் போவதில்லை.. புதிய அரசின் கீழ் மேலும் அதிக பணிகள் மேற் கொள்ளப்படும்” என்றார்.

கடந்த 2017-ல் ஆர்ஜேடி உடன் கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பாஜக உடன் கூட்டணி வைத்து முதல்வர் ஆனார். அதே வகையில் தற்போது பாஜகவுடன் அவர் கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி உடன் சேர்ந்து மீண்டும் முதல்வர் பதவி ஏற்றுள்ளார்.

இதற்கிடையில், லெஷி சிங் என்ற பெண்ணுக்கு தொடர்ந்து அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து மற்றொரு மூத்த பெண் எம்எல்ஏ பிமா பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது ஆளும் கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE