சுதந்திர தின விழா | டெலிபிராம்டர் இல்லாமல் 83 நிமிடம் உரையாற்றிய பிரதமர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுதந்திர தின அமுதப் பெருவிழா, தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க, 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நாட்டை வழிநடத்தும் பொறுப்பை மக்கள் என்னிடம் வழங்கினர். விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரமும் அவர்கள் வாழ்வில் முன்னேற்றமும் கிடைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க உறுதி பூண்டுள்ளேன்.

வரும் 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அதற்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்குவதற்காக நாம் 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க,இளைஞர்கள் தங்கள் அடுத்த 25 ஆண்டு கால வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.

டெலிபிராம்டர் இல்லாமல் 83 நிமிடம் உரை

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி 83 நிமிடங்கள் (1 மணி 23 நிமிடங்கள்) உரையாற்றினார். அப்போது அவர் டெலிபிராம்ப்டரை பயன்படுத்தாமல் காகித குறிப்புகளை வைத்தே உரை நிகழ்த்தினார்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு தொடர்ந்து 9-வது முறையாக நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதுவரை, தேசியக் கொடி ஏற்றும்போது, பிரிட்டனில் தயாரான துப்பாக்கிகள் மூலம் குண்டுகள் முழங்கப்பட்டு வந்தது. நேற்று முதல்முறையாக டிஆர்டிஓ-வால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹோவிட்சர் துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்கப்பட்டன. மேலும், முதல்முறையாக எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடி மீது பூக்கள் தூவப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE