மக்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் - பிரியங்கா காந்தி வதேரா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘ஆசாதி கவுரவ் யாத்ரா’ டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறும்போது, “இந்தியாவின் சுதந்திர நாளில் மக்களுக்கு எனது வாழ்த்துகள்! நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த நமது தியாகிகள், குடிமக்கள் மற்றும் தலைவர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒற்றுமையாக பாடுபடுவது என மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில், “தியாகங்கள், சிந்தனைகள், இந்தியாவின் பரந்த பண்டைய கலாச்சாரம், அரசிய லமைப்பு சட்ட விழுமியங்கள் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டு மதிப்பு ஆகியவை நாட்டுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தன. சுதந்திர இந்தியாவின் பயணம் இந்த வலுவான அடித்தளத்துக்கு சாட்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தி : வாரிசு அரசியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருப்பது குறித்து ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவுகளில், ‘‘உண்மை, அகிம்சை பாதையில் நடப்பதன் வலிமையை 75 ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு இந்தியா உணர்த்தியது. தாய் மண்ணுக்கு அர்ப்பணிப்போடு சேவையாற்றுவோம். சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்’’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE