புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் 75 சிறப்பு அம்சங்கள்:
> சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த முக்கியமான தருணத்தில் எனது அன்பான நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல! இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் மட்டுமல்ல, தங்கள் நாட்டை பெரிதும் நேசிக்கும் இந்தியர்களால் உலகெங்கும் நமது மூவர்ணக் கொடி பெருமை, மரியாதை மற்றும் புகழுடன் பறக்கவிடப்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
> தேசத்திற்கான கடமை ஆற்றுவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பாபுஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் ஆகியோருக்கு இந்த நாட்டில் உள்ள நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். நாட்டிற்கான கடமையே அவர்களின் வாழ்க்கைப் பாதையாக இருந்து இருக்கிறது.
> மங்கள் பாண்டே, தாந்தியா தோபே, பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஷ்பக் உல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது.
» சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் ஆண்டனி - கவனம் ஈர்க்கும் ‘கொலை’ ட்ரெய்லர்
» மூணாறில் மழையால் சரிந்த சுற்றுலா வர்த்தகம் இப்போது தொடர் விடுமுறையால் மீண்டது
> ராணி லட்சுமிபாய், ஜல்காரி பாய், துர்கா பாபி, ராணி கைதின்லியு, ராணி சென்னம்மா, பேகம் ஹஸ்ரத் மஹால், வேலு நாச்சியார் என இந்தியாவின் பெண் சக்தியை வெளிப்படுத்திய நமது வீரப் பெண்களுக்கு இந்த தேசம் நன்றிக்கடன் பட்டுள்ளது.
> சுதந்திரப் போரில் ஈடுபட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டைக் கட்டமைக்க பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேரு, சர்தார் வல்லபாய் படேல், ஷ்யாம பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, தீன்தயாள் உபாத்யாயா, ஜெய் பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, ஆச்சார்யா வினோபா பாவே, நானாஜி, தேஷ்முக், சுப்ரமணிய பாரதி போன்ற எண்ணற்ற மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது.
> சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது, காடுகளில் வாழும் பழங்குடி சமூகத்தை நினைத்து நாம் பெருமைப்படாமல் இருக்க முடியாது. பகவான் பிர்சா முண்டா, சித்து-கன்ஹு, அல்லூரி சீதாராம ராஜு, கோவிந்த் குரு போன்ற எண்ணற்றோர், சுதந்திரப் போராட்டத்தின் குரலாக மாறி, தொலைதூரக் காட்டில் உள்ள நமது பழங்குடி சகோதர சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்களை தாய்நாட்டிற்காக வாழவும் இறக்கவும் தூண்டினர். சுதந்திரப் போராட்டத்தில் இது போன்று பல அம்சங்கள் இடம்பெற்றிருப்பது நமது நாட்டின் அதிர்ஷ்டம் ஆகும்.
> கடந்த ஆண்டு முதல், நாடு எப்படி ‘அமிர்த பெருவிழாவை’ கொண்டாடுகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். இது அனைத்தும் 2021 இல் தண்டி யாத்திரையுடன் தொடங்கியது. சுதந்திரத்தின் ‘அமிர்த பெருவிழாவின்’ இலக்குகளின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மூலையிலும் மக்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர். ஒரே நோக்கத்திற்காக இவ்வளவு பெரிய மற்றும் விரிவான விழா கொண்டாடப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறையாக இருக்கும்.
> சில காரணங்களால் வரலாற்றில் குறிப்பிடப்படாத அல்லது மறக்கப்பட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் நினைவுகூரும் முயற்சி இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் மேற்கொள்ளப்பட்டது. இன்று, தேசம் அத்தகைய அனைத்து தலைவர்களையும், மாவீரர்களையும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கண்டுபிடித்து அவர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது. ‘அமிர்த பெருவிழா’ நிகழ்ச்சியின் போது இந்த எல்லா வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
> இன்று, நாம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடும் போது, கடந்த 75 ஆண்டுகளில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், மாநில நிர்வாகம் அல்லது மத்திய நிர்வாகம் என நாட்டைக் காத்தவர்கள் மற்றும் நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் ஆகியோரின் பங்களிப்புகளை நினைவுகூருவோம்.
> 75 ஆண்டுகளில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்கள் ஆற்றிய பங்களிப்பையும் இன்று நாம் நினைவுகூர வேண்டும்.
> 75 ஆண்டுகால இந்தப் பயணம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. பொன்னான மற்றும் சவாலான காலங்களுக்கு மத்தியில் நமது நாட்டு மக்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்; அவர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டனர், ஒருபோதும் அவர்கள் முயற்சிகளை கைவிடவில்லை. முன்னேற வேண்டும் என்ற தீர்மானங்களை ஒரு போதும் தொலைந்து போக விடவில்லை.
> வலுவான கலாச்சாரம், பண்பு நிறைந்தவை; மனதிலும் ஆன்மாவிலும் ஆழமாகப் பதிந்துள்ள எண்ணங்களின் பிணைப்பின் உள்ளார்ந்த ஆற்றலை இந்தியா கொண்டுள்ளது; அதாவது - இந்தியா அனைத்து ஜனநாயகத்திற்கும் தாய் என்பதை உலகம் அறிந்திருக்கவில்லை; ஜனநாயகத்தை உயிர்த் துடிப்பாக கொண்டிருப்பவர்கள் உறுதியுடன் செயல்படும்போது, அது உலகின் மிக சக்திவாய்ந்த சுல்தான்களை கூட அழிக்கும். இந்த ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்த விலைமதிப்பற்ற வலிமை நம்மிடம் உள்ளது என்பதை அனைவருக்கும் நிரூபித்துள்ளது.
> 75 ஆண்டுகாலப் பயணத்தில், நம்பிக்கைகள், ஆசைகள், ஏற்றத் தாழ்வுகளுக்கு மத்தியில், நம் அனைவரின் முயற்சியால்தான் நாம் இதுவரை வர முடிந்தது. 2014 ஆம் ஆண்டில், எனது நாட்டு மக்கள் எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியபோது, வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து என் அன்பான நாட்டு மக்களுக்கு நமது நாட்டின் புகழ் பாடும் பாக்கியத்தைப் பெற்ற சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான்.
> இந்தியாவின் கிழக்கு அல்லது மேற்கு, வடக்கு அல்லது தெற்கு, கடற்கரைப்பகுதிகள் அல்லது இமயமலை சிகரங்கள் என மிகத் தொலைவில் உள்ள அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகளில் இருந்து, ஒவ்வொரு மூலைகளையும் அடைந்து மகாத்மா காந்தியின் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்கு இலக்கை நிறைவேற்ற நான் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. கடைசி மைலில் உள்ளவர்களுக்கும் அதிகாரம் அளித்தல் மற்றும் உயர்த்துவது என்ற அவரது இலக்குக்கு நான் என்னை அர்ப்பணித்துள்ளேன்.
> இன்று அமிர்தப் பெருவிழாவில், புகழ்பெற்ற 75 ஆண்டுகளை நாம் கொண்டாடுகிறோம். 76வது வருடத்தின் முதல் காலையில், இப்படிப்பட்ட ஒரு மகத்தான தேசத்தைப் பார்த்ததில் பெருமிதம் அடைகிறேன்.
> நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் விஷயங்களை மாற்ற விரும்புகிறார்கள், விஷயங்கள் மாறுவதைக் காண விரும்புகிறார்கள், ஆனால் காத்திருக்கத் தயாராக இல்லை. தன் கண்ணெதிரே இவையெல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்பி அதை தன் கடமையின் ஒரு பகுதியாக செய்ய விரும்புகிறான். மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசுகளாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளாக இருந்தாலும் இல்லை எந்த மாதிரியான ஆட்சி அமைப்பாக இருந்தாலும் சரி, நாம் ஒவ்வொருவரும் இந்த லட்சிய சமுதாயத்திற்கு தீர்வு காண வேண்டும், அவர்களின் கனவுகளை நிறைவேற்ற நாம் அதிக நேரம் காத்திருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.
> நமது லட்சிய சமுதாயம் நீண்ட காலமாக காத்திருக்கிறது. ஆனால் இப்போது அவர்கள் தங்கள் வருங்கால சந்ததியினரை காத்திருக்கும்படி கட்டாயப்படுத்த தயாராக இல்லை, எனவே இந்த ‘அமிர்த காலத்தின்’ முதல் விடியல், அந்த லட்சிய சமுதாயத்தின் அபிலாஷைகளை நிறைவேற்ற நமக்கு ஒரு பெரிய பொன்னான வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.
> சமீபத்தில், இதுபோன்ற ஒன்றிரண்டு சக்திகளை நாம் பார்த்திருக்கிறோம், அனுபவித்திருக்கிறோம், அதுதான் இந்திய கூட்டு உணர்வின் மறுமலர்ச்சி. இந்த விழிப்புணர்வும், மறுமலர்ச்சியும்தான் நமது மிகப்பெரிய சொத்து என்று நான் நினைக்கிறேன்.
> ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, நாட்டில் மறைந்துள்ள சக்தியை மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மூவர்ணக் கொடியின் பயணத்தை நாடு கொண்டாடும் விதத்தில், மூவர்ணக் கொடியால் வெளிப்பட்டிருக்கும் நமது நாட்டின் சக்தியை சமூக அறிவியலின் முன்னணி வல்லுனர்களால் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
> உலகமே இந்தியாவை பெருமையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது. இந்திய மண்ணில் நிலவும் பிரச்சனைகளுக்கு உலகமே தீர்வு தேட ஆரம்பித்துள்ளது. உலகில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், உலகத்தின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், 75 வருட அனுபவப் பயணத்தின் விளைவு.
> எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சக்தி உண்மையில் எங்குள்ளது என்பதை உலகம் உணர ஆரம்பித்துள்ளது. நான் அதை ஒரு பெண் சக்தியாக பார்க்கிறேன். நான் அதை மூன்று சக்தியாக பார்க்கிறேன், அதாவது ஆசை, மீட்சி மற்றும் எந்த உலக நாடுகளின் நம்பிக்கையை எழுப்புவதில் நமது நாட்டு மக்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை நாம் அறிவோம்.
> 130 கோடி நாட்டு மக்கள் பல தசாப்த கால அனுபவத்திற்குப் பிறகு, நிலையான அரசாங்கத்தின் முக்கியத்துவம், அரசியல் நிலைத்தன்மையின் வலிமை, கொள்கைகள் மற்றும் கொள்கைகளில் நம்பிக்கை எவ்வாறு வளர்கிறது என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர். உலகமும் இப்போது அதை புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது அரசியல் நிலைத்தன்மை, கொள்கைகளில் சுறுசுறுப்பு, முடிவெடுப்பதில் வேகம், எதையும் சாதிக்கும் துணிவு, உலகளாவிய நம்பிக்கை இருக்கும் போது, அனைவரும் வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறுகிறார்கள்.
> அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்துடன் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம், ஆனால் படிப்படியாக அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதன் மூலம் நாட்டு மக்கள் அதற்கு மேலும் வண்ணங்களைச் சேர்த்துள்ளனர். இதனால், நமது கூட்டு சக்தியையும் கூட்டுத் திறனையும் பார்த்தோம்.
> ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த ஏரி அமைக்கும் பிரச்சாரத்துடன் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் மக்கள் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றனர். மக்கள் தங்கள் சொந்த முயற்சியால், அந்தந்த கிராமங்களில் நீர் சேமிப்புக்காக ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.
> இன்று, 130 கோடி நாட்டு மக்களின் வலிமையைப் பற்றி நான் பேசுகிறேன், அவர்களின் கனவுகளைக் கண்டேன், அவர்களின் தீர்மானங்களை செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து உணர்கிறேன், வரவிருக்கும் 25 ஆண்டுகளுக்கான "ஐந்து முக்கிய அம்சங்கள்" மீது நாம் கவனத்தை செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
> நமது தீர்மானங்கள் மற்றும் வலிமையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047ஆம் ஆண்டுக்குள் அந்த ஐந்து முக்கிய அம்சங்களையும் செயல்படுத்தி சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் அனைத்தையும், நிறைவேற்றும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும்.
> அமிர்த காலத்தின் ஐந்து முக்கிய அம்சங்கள் - வளர்ந்த இந்தியாவின் குறிக்கோள், காலனித்துவ மனநிலையின் கடைசி தடயத்தையும் அகற்றுதல், நமது அடிப்படை, ஒற்றுமை மற்றும் கடமை உணர்வு ஆகியவற்றில் பெருமிதம் கொள்ளுதல்.
> தற்போதைய காலத்தின் தேவை போட்டியுடனான கூட்டுறவு கூட்டாட்சி. பல்வேறு துறைகளில் முன்னேறுவதில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை இருக்கட்டும்.
> எனது முதல் உரையின் போது தூய்மை பற்றி நான் முதன்முதலில் பேசியபோது, ஒட்டுமொத்த நாடும் அதை ஏற்றுக்கொண்டது. ஒவ்வொருவரும் அவரவர் திறனுக்கு ஏற்றவாறு தூய்மையை நோக்கி நகர்ந்தனர், தற்போது அசுத்தத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாடுதான் அதைச் செய்திருக்கிறது, செய்துகொண்டிருக்கிறது, எதிர்காலத்திலும் அதைத் தொடரும். திறந்த வெளியில் மலம் கழிப்பதில் இருந்து விடுதலை என்பது இந்தியாவில் இன்று சாத்தியமாகியுள்ளது.
> உலகமே இக்கட்டான நிலையில் இருந்தபோது, 200 கோடி தடுப்பூசி இலக்கை குறிப்பிட்ட காலக்கெடுவில் கடந்து, முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்த நாடு நமது.
> வளைகுடாவில் இருந்து வரும் எரிபொருளை நம்பியே இருக்கிறோம். பயோ-ஆயிலை நோக்கி எப்படி செல்வது என்று முடிவு செய்திருந்தோம். 10 சதவிகிதம் எத்தனால் கலப்பது என்பது மிகப் பெரிய கனவாகத் தோன்றியது. இது சாத்தியமில்லை என்பதை பழைய அனுபவங்கள் காட்டுகின்றன. ஆனால் 10 சதவீத எத்தனால் கலக்கும் கனவை நாடு குறித்த காலத்திற்கு முன்பே நனவாக்கியுள்ளது.
> இவ்வளவு குறுகிய காலத்தில் 2.5 கோடி மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவது சிறிய பணி அல்ல, ஆனால் அதை நாடு செய்துள்ளது. இன்று நாடு இலட்சக்கணக்கான குடும்பங்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை விரைவாக வழங்கி வருகிறது.
> நாம் உறுதியுடன் இருந்தால் நம் இலக்கை அடைய முடியும் என்று அனுபவம் சொல்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் குறிக்கோளாக இருந்தாலும், நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கட்டும் நோக்கமாக இருந்தாலும், பல மருத்துவர்களை உருவாக்கும் நோக்கமாக இருந்தாலும் சரி ஒவ்வொரு துறையிலும் வளரும் வேகம் மிகவும் அதிகரித்துள்ளது.
> உலகம் இன்னும் எவ்வளவு காலம் நமக்கு சான்றிதழ்களை விநியோகிக்கும்? உலகத்தின் சான்றிதழில் நாம் எவ்வளவு காலம் வாழ்வோம்? நமக்கான தரத்தை நாமே அமைத்துக் கொள்ள வேண்டாமா? 130 கோடிகள் கொண்ட ஒரு நாடு தனது தரத்தை மீற முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? எந்த சூழ்நிலையிலும், நாம் மற்றவர்களைப் போல தோற்றமளிக்க முயற்சிக்கக்கூடாது. நமது சொந்த ஆற்றலுடன் வளர்வது நமது சுபாவமாக இருக்க வேண்டும். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டும். தொலைதூரம் சென்று ஏழு கடல்களை தாண்டினாலும் அடிமைத்தனத்தின் கூறு நம் மனதில் இருக்கக்கூடாது.
> புதிய தேசியக் கல்விக் கொள்கை, பல்வேறு நபர்களின் கருத்துப் பரிமாற்றத்துடன், பல சிந்தனை கூட்டங்களுடன் உருவாக்கப்பட்டு, நாட்டின் கல்விக் கொள்கையின் அடிநாதமாக இருப்பதை நான் நம்பிக்கையுடன் பார்க்கிறேன். நாம் வலியுறுத்திய திறமை, அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான வலிமையைத் தரும் சக்தியை உடையது.
> சில நேரங்களில் நம் திறமை நம்பிக்கையின் அடிமைத்தனத்தில் பிணைக்கப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இது அடிமை மனநிலையின் விளைவு. நம் நாட்டின் ஒவ்வொரு மொழிக்கும் நாம் பெருமைப்பட வேண்டும். மொழி நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் இருக்கலாம், ஆனால் அது நம் நாட்டு மொழி என்றும், நம் முன்னோர்கள் உலகுக்கு வழங்கிய மொழி என்றும் பெருமைப்பட வேண்டும்.
> டிஜிட்டல் இந்தியாவின் கட்டமைப்பை இன்று நாம் காண்கிறோம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்கிறோம். இவர்கள் யார்? இது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அல்லது கிராமங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திறமையாளர்களின் குழுவாகும். இன்று புதிய கண்டுபிடிப்புகளுடன் உலகத்தின் முன் வந்து கொண்டிருக்கும் நமது இளைஞர்கள் இவர்கள்தான்.
> இன்று உலகம் முழுமையான சுகாதாரப் பாதுகாப்பு பற்றி விவாதிக்கிறது. ஆனால் முழுமையான சுகாதாரப் பாதுகாப்பு பற்றிப் பேசும்போது, இந்தியாவின் யோகா, இந்தியாவின் ஆயுர்வேதம் மற்றும் இந்தியாவின் முழுமையான வாழ்க்கை முறையை நோக்கி உலகம் பார்க்கிறது. இதுவே நாம் உலகிற்கு வழங்கி வரும் நமது மரபு.
> இன்று உலகம் அதன் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இப்போது நமது பலத்தைப் பாருங்கள். இயற்கையோடு வாழத் தெரிந்தவர்கள் நாம். கரடுமுரடான நெல் மற்றும் தினை ஆகியவை வீட்டுப் பொருட்கள். இது நமது பாரம்பரியம். நமது சிறு விவசாயிகளின் கடின உழைப்பால் சிறு நிலங்களில் நெல் செழித்தது. இன்று சர்வதேச அளவில் தினை ஆண்டைக் கொண்டாட உலகம் முன்னேறி வருகிறது. அதாவது இன்று உலகம் முழுவதும் நமது பாரம்பரியம் போற்றப்படுகிறது. அதில் பெருமைப்படக் கற்றுக் கொள்வோம். உலகிற்கு நாம் வழங்க நிறைய இருக்கிறது.
> தாவரங்களில் தெய்வீகத்தைக் காணும் மக்கள் நாம். நதியை தாயாக கருதும் மக்கள் நாம். ஒவ்வொரு கல்லிலும் கடவுளைப் பார்ப்பவர்கள் நாம். இதுவே நமது சக்தி. ஒவ்வொரு நதியையும் தாயின் வடிவமாகவே பார்க்கிறோம். இத்தகைய மகத்தான சுற்றுச்சூழல் நமது பெருமை! அப்படிப்பட்ட பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமைப்படும்போது, உலகமும் அதைப் பற்றி பெருமை கொள்ளும்.
இன்று உலகம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது - எல்லோரையும் விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தால் ஏற்படும் மோதல்கள் - எல்லா பதற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. இதைத் தீர்க்கும் ஞானம் நம்மிடம் உள்ளது. நமது அறிஞர்கள் “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” அதாவது முழுமையான உண்மை ஒன்றே. ஆனால் அது வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது என்று கூறியுள்ளனர். இதுவே நமது பெருமை.
> உலக நலம் கண்ட மக்கள் நாம்; “சர்வே பவந்து சுகினா, ஸர்வே சந்து நிரமயாঃ” அதாவது “அனைத்து உயிர்களும் நிம்மதியாக இருக்கட்டும்; அனைவரும் நோயற்றவர்களாக இருக்கட்டும்”, என்று நம்பி, நமது மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் சமூக நன்மையின் பாதையில் சென்று வருகிறோம். அனைவரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாக இருக்கவும், அனைவரும் நோயிலிருந்து விடுபடவும், அனைவரும் மங்களகரமானதைக் காணவும், யாரும் துன்பப்படாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்வோம் என்பது நமது மதிப்புகளில் ஆழமாக பதிந்துள்ளது.
> இதேபோல், மற்றொரு மிக முக்கியமான பிரச்சினை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. நமது மிகப்பெரிய நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். எண்ணற்ற மரபுகள் மற்றும் சமயங்களின் அமைதியான சகவாழ்வு நமது பெருமை. நம்மைப் பொறுத்தவரை அனைவரும் சமம். யாரும் தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர் அல்ல; அனைவரும் நமது சொந்தம். அனைவரும் ஒன்றே என்ற இந்த உணர்வு ஒற்றுமைக்கு முக்கியமானது.
> செங்கோட்டையின் இந்த கொத்தளத்திலிருந்து, நான் ஒரு வேதனையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், நமது அன்றாட பேச்சு, நடத்தை ஆகியவற்றில் ஒரு வக்கிரத்தை நாம் கண்டிருக்கிறோம் என்று சொல்வது எனக்கு வேதனை அளிக்கிறது. நமது பெண்களுக்கு எதிராக தவறான மற்றும் தகாத வார்த்தைகளை நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். நம் அன்றாட வாழ்வில் பெண்களை இழிவுபடுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் ஒவ்வொரு நடத்தை, பழக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட உறுதிமொழி எடுக்க முடியாதா? தேசத்தின் கனவுகளை நிறைவேற்றுவதில் பெண்களின் பெருமை ஒரு பெரிய சக்தியாக இருக்கும். நான் இந்த சக்தியைப் பார்க்கிறேன், எனவே நான் அதை வலியுறுத்துகிறேன்.
> 24 மணி நேர மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் வேலை, ஆனால் தன்னால் முடிந்த அளவு யூனிட்களை சேமிப்பது குடிமகனின் கடமை. ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் வழங்குவது அரசின் பொறுப்பு விளைச்சல்' என்பதில் கவனம் செலுத்தி தண்ணீரைச் சேமிப்பதன் மூலம் முன்னேறுவோம் என்ற குரல் எனது ஒவ்வொரு வயலில் இருந்தும் வர வேண்டும். ரசாயனமில்லா விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம், செய்வது நம் கடமை.
> காவல்துறையாக இருந்தாலும் சரி, மக்களாக இருந்தாலும் சரி, ஆட்சியாளராக இருந்தாலும் சரி, நிர்வாகியாக இருந்தாலும் சரி, குடிமைக் கடமையில் இருந்து யாரும் விலக முடியாது. ஒவ்வொருவரும் ஒரு குடிமகனின் கடமைகளைச் செய்தால், நாம் விரும்பிய இலக்குகளை முன்கூட்டியே அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
> இன்று மகரிஷி அரவிந்தரின் பிறந்தநாள். அந்த மகானின் பாதங்களில் வணங்குகிறேன். ‘சுதேசியில் இருந்து சுய ராஜ்ஜியம், ‘சுய ராஜ்ஜியத்தில் இருந்து சூர்யோதயம்’ என்று அழைப்பு விடுத்த இந்த மாபெரும் மனிதரை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுதான் அவருடைய மந்திரம். எனவே, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பது ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு அரசு மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பாகிறது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பது அரசாங்க நிகழ்ச்சியோ அல்லது அரசாங்கத் திட்டமோ அல்ல. இது சமூகத்தின் வெகுஜன இயக்கம், இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
> சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்த ஒலியைக் கேட்டோம், இதற்காக நமது காதுகள் ஏங்கியிருந்தன. 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடிக்கு இந்தியாவில் தயாரித்த பீரங்கி வணக்கம் செலுத்தியுள்ளது. இந்த ஒலியால் ஈர்க்கப்படாத இந்தியர் யாராவது இருப்பார்களா?
> இன்று நம் நாட்டின் ராணுவ வீரர்களை எனது இதயத்திலிருந்து வாழ்த்த விரும்புகிறேன். தற்சார்பு என்ற பொறுப்பை ராணுவ வீரர்கள் ஒருங்கிணைத்த விதத்தையும், துணிச்சலுடனும் ஏற்றுக்கொண்ட விதத்தையும் நான் வணங்குகிறேன். பாதுகாப்பு தொடர்பான 300 பொருட்களை இறக்குமதி செய்வதில்லை என்று ஆயுதப் படைகள் பட்டியலிட்டு முடிவெடுத்த தீர்மானம் சாதாரணமானதல்ல.
> உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் (PLI) திட்டம்: உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க இந்தியா வருகிறார்கள். தங்களுடன் புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டு வருகிறார்கள். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். இந்தியா ஒரு உற்பத்தி மையமாக மாறி வருகிறது. இது தற்சார்பு இந்தியாவுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது.
> எலக்ட்ரானிக் பொருட்கள் அல்லது மொபைல் போன்கள் உற்பத்தியாக இருந்தாலும், இன்று நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது.
> நம் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி செய்யப்படும் போது எந்த இந்தியன் பெருமைப்பட மாட்டான்? இன்று வந்தே பாரத் ரயிலும் நமது மெட்ரோ ரயில் பெட்டிகளும் உலகையே ஈர்க்கும் பொருளாக மாறி வருகிறது.
> எரிசக்தி துறையில் நாம் தற்சார்பு பெற வேண்டும். எரிசக்தி துறையில் நாம் எவ்வளவு காலம் மற்றவர்களைச் சார்ந்து இருப்போம்? சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி போன்ற பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலில் நாம் தற்சார்பு பெற்றிருக்க வேண்டும். ஹைட்ரஜன் இயக்கம், உயிரி எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் முன்னணியில் இருக்க வேண்டும்.
> இன்று இயற்கை விவசாயமும் தற்சார்பு பெறுவதற்கான ஒரு வழியாகும். இன்று நுண் தொழில்நுட்ப உரத் தொழிற்சாலைகள் நாட்டில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இயற்கை விவசாயமும், ரசாயனமற்ற விவசாயமும் தற்சார்புக்கு ஊக்கமளிக்கும். இன்று, பசுமைத் துறை பணிகள் வடிவில் நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
> இந்தியா தனது கொள்கைகள் மூலம் வான் வெளியைத் திறந்து விட்டது. உலகிலேயே ஆளில்லா விமானங்கள் தொடர்பான மிகவும் முற்போக்கான கொள்கையை இந்தியா கொண்டு வந்துள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்துள்ளோம். தனியார் துறையினரையும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
> நாம் உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். உலக நாடுகளின் என்பது தற்சார்பு இந்தியாவின் கனவுகளில் ஒன்று. அது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களாக இருந்தாலும், நமது தயாரிப்புகள் குறைபாடு மற்றும் பாதிப்பு இல்லாதது (ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்) என்று உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். சுதேசி குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.
> இன்று வரை நமது மதிப்பிற்குரிய லால் பகதூர் சாஸ்திரியை ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ அதாவது ‘வாழ்க ராணுவ வீரன், வாழ்க விவசாயி’ என்ற அவரது உத்வேகமான கூற்றுக்காக நாம் எப்போதும் நினைவுகூர்வோம். பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் அதில் ‘ஜெய் விக்யான்’ அதாவது ‘வாழ்க விஞ்ஞானம்’ என்ற புதிய இணைப்பைச் சேர்த்தார். நாங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால் இந்த புதிய அமிர்தகால கட்டத்தில் ‘ஜெய் அனுசந்தான்’ அதாவது ‘வாழ்க புதிய கண்டுபிடிப்புகள்’ என்று சேர்க்க வேண்டியது அவசியம். ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தான் - ‘வாழ்க ராணுவ வீரன், வாழ்க விவசாயி, வாழ்க விஞ்ஞானம், வாழ்க புதிய கண்டுபிடிப்புகள்’.
> இன்று நாம் அனைவரும் 5ஜி சகாப்தத்தில் நுழைய தயாராக இருக்கிறோம். உலகளாவிய வளர்ச்சி படியை எட்டிப்பிடிக்க நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ஆப்டிகல் ஃபைபர் ஒவ்வொரு கிராமத்திலும் கடைசி மைல் வரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
> டிஜிட்டல் இந்தியாவின் கனவு கிராமப்புற இந்தியா மூலம் எட்டப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கிராமங்களில் அந்த கிராமத்தின் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் நான்கு லட்சம் பொது சேவை மையங்கள் உருவாக்கப்படுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
> செமிகண்டக்டர்களை உருவாக்குதல், 5G சகாப்தத்தில் நுழைதல், ஆப்டிகல் ஃபைபர்களின் விரிவாக்கம் கொண்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், நம்மை நவீனமாகவும், வளர்ந்ததாகவும் நிலைநிறுத்துவதற்காக மட்டுமல்ல. கல்விச் சூழல் அமைப்பில் முழுமையான மாற்றம், சுகாதார உள்கட்டமைப்பில் புரட்சி மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
> மனித குலத்தின் தொழில்நுட்ப யுகமாகப் போற்றப்படும் இந்தப் பத்தாண்டுகளில் இந்தியா அபரிமிதமாக முன்னேறும் என்பதை என்னால் கணிக்க முடிகிறது. இது தொழில்நுட்பத்தின் ஒரு தசாப்தம். தகவல் தொழில்நுட்பத் துறையில், இந்தியா உலக அளவில் கணக்கிடும் சக்தியாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்ப யுகத்தில் பங்களிக்கும் திறன் நம்மிடம் உள்ளது.
> நமது அடல் புத்தாக்க இயக்கம், நமது இன்குபேஷன் மையங்கள், நமது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இளைய தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து, ஒரு புதிய துறையை உருவாக்கி வருகின்றன. விண்வெளிப் பயணமாக இருந்தாலும் சரி, நமது ஆழ்கடல் பயணமாக இருந்தாலும் சரி, கடலுக்குள் ஆழமாகச் செல்ல வேண்டுமா அல்லது வானத்தைத் தொட வேண்டுமா, இவை புதிய பிரிவுகள், இவை மூலம் நாம் முன்னேறி வருகிறோம்.
> நமது சிறு விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள், குறுந்தொழில்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டுத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து சேவை வழங்குநர்கள் போன்றவர்களின் திறனை நாம் உணர்ந்து பலப்படுத்த வேண்டும். அதிகாரமளிக்க வேண்டிய மிகப்பெரிய மக்கள் தொகையை இவர்கள் உருவாக்குகிறார்கள்.
> கடந்த சில வருட அனுபவத்தில் இருந்து நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நீதித்துறையில் பணியாற்றும் ‘பெண் சக்தியை’ நீங்கள் பார்த்திருப்பீர்கள். கிராமப்புற மக்கள் பிரதிநிதிகளைப் பாருங்கள். நமது ‘பெண் சக்தி’ நமது கிராமங்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது. அறிவு அல்லது அறிவியல் துறையைப் பாருங்கள், நம் நாட்டின் ‘பெண் சக்தி’ தெரியும். காவல்துறையிலும், மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நமது ‘பெண் சக்தி’ எடுத்து வருகிறது.
> வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், அது விளையாட்டு மைதானமாக இருந்தாலும் சரி, போர்க்களமாக இருந்தாலும் சரி, இந்தியாவின் ‘பெண் சக்தி’ ஒரு புதிய வலிமையுடன் புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கி வருகிறது. இந்தியாவின் 75 ஆண்டுகாலப் பயணத்தின் பங்களிப்போடு ஒப்பிடுகையில், அடுத்த 25 ஆண்டுகளில் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களான ‘பெண் சக்தி’யின் பன்மடங்கு பங்களிப்பை என்னால் பார்க்க முடிகிறது. இந்த அம்சத்தில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, எவ்வளவு அதிக வாய்ப்புகளையும், வசதிகளையும் நம் மகள்களுக்கு வழங்குகிறோமோ அவர்கள் அதை விட அதிகமாக நமக்குத் திருப்பித் தருவார்கள். நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார்கள்.
> நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி, தலைமை தாங்கி, பல துறைகளில் முன்னுதாரணமாக உழைத்த பல மாநிலங்கள் நம் நாட்டில் உள்ளன. இது நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனால் இன்றைய காலத்தின் தேவை, நமக்கு கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் போட்டியுடனான கூட்டுறவு கூட்டாட்சி தேவைப்படுகிறது. வளர்ச்சிக்கு போட்டி தேவை.
> நான் எல்லாவற்றையும் விவாதிக்க விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஒன்று ஊழல், மற்றொன்று வாரிசு ஆதரவு போக்கு. ஊழலுக்கு எதிராக முழு வலிமையுடன் போராட வேண்டும்.
> கடந்த எட்டு ஆண்டுகளில், தவறானவர்களின் கைகளுக்குச் செல்லும் இரண்டு லட்சம் கோடி ரூபாயை, நேரடிப் பணப் பரிமாற்றம், ஆதார், மொபைல் என அனைத்து நவீன முறைகளையும் பயன்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வெற்றி பெற்றுள்ளோம்.
> கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வங்கிகளை கொள்ளையடித்து நாட்டை விட்டு தப்பியோடியவர்களின் சொத்துக்களை கைப்பற்றி, அவர்களை நமது நாட்டிற்கு மீட்டு வர முயற்சித்து வருகிறோம். சிலர் கம்பிகளுக்குப் பின்னால் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தை உறுதி செய்ய நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
> ஊழல்வாதிகள் நாட்டை கரையான் போல் தின்று கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக போராடி, போராட்டத்தை தீவிரப்படுத்தி, தீர்க்கமான கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே, எனது 130 கோடி நாட்டு மக்களே, தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து ஆதரவளிக்கவும்! இன்று நான் இந்தப் போரில் ஈடுபட உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற வந்துள்ளேன். இந்தப் போரில் நாடு வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
> நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், சிலர் அவர்களைப் புகழ்வதற்காகக் கீழ்த்தரமாகச் செயல்படுவது உண்மையிலேயே ஒரு சோகமான நிலைதான். எனவே, சமூகத்தில் ஊழல்வாதிகள் மீது வெறுப்பு உணர்வு ஏற்படும் வரை, இதுபோன்ற மனநிலை முடிவுக்கு வரப்போவதில்லை.
> மறுபுறம், நான் வாரிசுகளை ஆதரிக்கும் போக்கு குறித்து விவாதிக்க விரும்புகிறேன், நான் வாரிசுகளை ஆதரிக்கும் போக்குப் பற்றி பேசும்போது, அரசியல் வாரிசுகளை பற்றி மட்டுமே பேசுகிறேன் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் இந்த வாரிசுகளை ஆதரித்தல் எனும் கொடிய நோய் நாட்டின் அனைத்து நிறுவனங்களிலும் பரவியுள்ளது, திறமை மற்றும் வாய்ப்புகளில் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
> எனவே, இந்திய அரசியலமைப்பின் உண்மையான உணர்வில், இந்திய அரசியலையும் நாட்டின் அனைத்து உள்ளுணர்வையும் தூய்மைப்படுத்துவதற்கான அச்சுறுத்தலை வேரறுக்க மூவர்ணக் கொடியின் கீழ் உறுதிமொழி எடுக்குமாறு நாட்டு மக்களை செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து கேட்டுக்கொள்கிறேன்.
> புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கி, புதிய தீர்மானங்களை கொண்டுவந்து, நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் ‘அமிர்த காலத்தை’ இன்றே தொடங்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா அமிர்த காலத்தின் திசையில் நகர்ந்துள்ளது. எனவே, இந்த ‘அமிர்த காலத்தில் அனைவரின் முயற்சியும் அவசியம். இந்திய அணி என்ற உற்சாகம் நாட்டை முன்னேற்றப் போகிறது. 130 கோடி நாட்டு மக்களைக் கொண்ட இந்த டீம் இந்தியா ஒரு அணியாக முன்னேறி அனைத்து கனவுகளையும் நனவாக்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago