'அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணியுங்கள்' - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், "அடுத்த 25 ஆண்டுகள் தேச வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளை இளைஞர்கள் தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டுகிறேன்.

நாம் நம் தேச விடுதலைக்காகப் போராடியவர்கள் கண்ட கனவை நனவாக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.

நம் நாடு இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த தேசமாக இருக்கும். அதற்கு நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது. இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும். மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றுக் கொள்வோம். கடைசியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது.

இந்த 5 உறுதிமொழிகளையும் ஏற்று நாட்டு மக்கள் பின்பற்றினால் இந்தியாவை இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும். நம் விடுதலை வீரர்களின் கனவு நிறைவேறும்.

நம் கனவுகள் பெரிதாக இருக்கும்போது நாம் அதற்காக செலுத்த வேண்டிய உழைப்பும் கடினமாக, பெரிதாக இருக்கும். நாம் அதற்கான உத்வேகத்தை நம் விடுதலைப் போராட்ட வீரர்களிடமிருந்து பெற வேண்டும். நாம் நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் பாடுபட வேண்டும். மகாத்மா காந்தி சொன்னதுபோல், நாம் கடைசி மனிதனாக்காக போராட வேண்டும். அதுதான் நம் தேசத்தின் பலம்.

உலக நாடுகள் நம் தேசத்தை இப்போது பெருமிதத்துடன், நம்பிக்கையுடன் பார்க்கிறது. நாம் பிரச்சினைகளைத் தீர்க்கும் நாடாகப் பார்க்கப்படுகிறோம். இந்தியா கனவுகளை நினைவாக்கிக் கொள்ளும் களமாக அறியப்படுகிறது. நாம் புதிய இந்தியாவை வளர்க்க அனைவருக்குமான வளர்ச்சி என்ற காந்தியின் கனவை கொள்ள வேண்டும். அனைவரும் இணைந்து, நம்பிக்கையுடன், முயற்சியுடன் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்" என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE