இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தினர் 10 பேரை திருப்பி அனுப்பிய போலீஸார்

By செய்திப்பிரிவு

சில்ஷர்: உரிய அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு சிறுவர்கள் உள்பட வங்கதேசத்தினர் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இருநாட்டுக்கு இடையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அசாம் மாநில காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 4 பேர் கோலகாட் மாவட்ட ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள். எஞ்சிய அனைவரும் கரீம் கஞ்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டவர்கள். அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் வங்கதேசத்தின் முன்ஷிகஞ்ச் மாவட்டத்தையும், ஐந்து பேர் சைல்ஹெட் மற்றும் நான்கு பேர் காக்ஸ் பஸார் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதில், பலர் வேலை தேடி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள். இவர்களை விடுவிப்பது தொடர் பாக இந்திய மற்றும் வங்கதேச அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு காணப்பட்டதையடுத்து பிடிபட்ட ஏழு ஆண்கள், ஒரு பெண் உள்ளிட்ட 10 பேரும் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் எல்லைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை வங்கதேச எல்லை காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அசாம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE