தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களைக் கோரிய உத்தராகண்ட் பாஜக தலைவர் - சர்ச்சைக்குப் பின் விளக்கம்

By செய்திப்பிரிவு

லக்னோ: தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை சேகரித்து தனக்கு அனுப்புமாறு உத்தரகாண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியான. இதற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த சர்ச்சை தொடர்பாக பாஜக தலைவர் மகேந்திர பட் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "நான் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களின் வீடுகளில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தேன். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கட்சித் தொண்டர் ஒவ்வொருவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காகவே அதனைக் கூறியிருந்தேன். இருப்பினும், இந்தத் தேசத்தின் மீது பற்று கொண்ட எவருமே, தேசியக் கொடியை வீட்டில் ஏற்ற தயங்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு குடிமகனும் வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் அனைவருமே தேசியக் கொடியை ஏந்தி தலைநிமிர்ந்து சென்றே ஆங்கிலேயரை எதிர்த்தனர்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஹல்த்வானி என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மகேந்திர பட், "சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றாத யாரையும் தேசம் நம்பாது. தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற இந்தியர் என்ற உணர்வு கொண்ட எவருக்குமே தயக்கம் இருக்காது தானே" என்று பேசியிருந்தார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகிறது என்று மகேந்திர பட் விமர்சித்துள்ளார்.

தேசியக் கொடியானது மக்களுக்கு பல்வேறு வழிகளில் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதுபோல் மக்களிடம் தேசியக் கொடி வாங்க பணமில்லை என்று கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி மூவர்ண யாத்திரை நடத்துவது தொடர்பான கேள்விக்கு, “தேச சுதந்திரத்தைப் போற்றுபவர்களை நிச்சயம் வரவேற்போம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE