சமூக நலத் திட்டங்களும் இலவசங்களும் வெவ்வேறானவை: உச்ச நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்

தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, "இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை மத்திய அரசால் நடத்த முடியாமல் போகலாம். எந்தவொரு அரசியல் கட்சிகளும் இத்தகைய இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு விரும்பாமல் இல்லை. எனவே, மிக முக்கியமான பிரச்சினையாக உள்ள இதுகுறித்து நிபுணர்களைக் கொண்ட சிறப்பு குழு அமைத்து நல்ல முன்வடிவுகளை கொண்டு வரலாம்" என தலைமை நீதிபதி கருத்து கூறியிருந்தார்.

மேலும் எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், நிதிக் குழு, சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல தரப்பிலும் இதுதொடர்பாக கருத்து கேட்க வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது ஆலோசனைகளை வழங்குமாறும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை நாளிதழ்களில் பார்த்தோம். ஆனால் நேற்றிரவு வரை தங்களுக்கு கிடைக்கவில்லை, நீதிமன்றத்துக்கு முன்னர் நாளிதாழுக்கு கிடைத்தது எப்படி? இதற்கு மேல் அதில் படிப்பதற்கு என்ன இருக்கிறது?" என்று கேட்டார்.

“இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டுமா? தேர்தல் வாக்குறுதி குறித்த அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பார்களா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், "அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" என்று தெரிவித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், "பொரும்பாலான தேர்தல் இலவச வாக்குறுதிகள், அறிக்கைகளில் இடம்பெறுவது இல்லை. பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரைகளின்போது அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், "அனைத்து மாநிலங்களுக்கும் 15 லட்சம் கோடி கடன் உள்ளது. தேர்தல் ஆணையம் இவற்றைப் பார்க்க நிதி நிபுணர்களைக் கொண்ட குழுவை கொண்டிருக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் முதன்முதலாக செயல்படுத்தப்பட்ட இலவச கலர் டிவி உள்ளிட்ட திட்டங்களை சுட்டிக்காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி, "இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த அளவுக்கு தலையிட முடியும்? இலவசங்களும் சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை. இந்த இலவசங்கள் தொடர்பாக, ஒருசாரர் வேண்டுமென்றும், ஒரு சாரர் வேண்டாம் என்றும் கூறுவர். ஆனால், இந்த விவகாரம் ஒரு முக்கியப் பிரச்சினை என்பதால் அனைத்து தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும்.

தேர்தல் இலவச அறிவிப்பு விவகாரத்தில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், உலகின் மற்ற நாடுகளைப் போன்று, பொருளாதார ஒழுங்கு என்பது ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலை என்ன என்பது தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை இழைக்கக்கூடாது.
இந்த விவகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "இந்த இலவச விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற தயங்குவது ஆச்சர்யமாக உள்ளது. மேலும் இது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கும் உட்பட்டதல்ல" என்று வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி, "நீதிமன்றம் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல எனக் கூறி சில விவகாரங்களில் தலையிடாமல் இருக்க முடியாது. இலவச அறிவிப்பு வெளியிடும் கட்சிகளை தகுதி நீக்கம் உள்ளிட்டவற்றிற்குள் செல்ல விரும்பவில்லை. அது ஜனநாயகமாகவும் இருக்காது. எனவே, எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒரு ஜனநாயக நாடு" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோர் தங்களது கருத்து, பார்வை மற்றும் எண்ணங்களை முன்மொழிய வேண்டும் எனக் கூறி, வழக்கை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், "உச்ச நீதிமன்றம் கருத்துப்படி தேர்தல் இலவசம் குறித்து ஆய்வு குழு அமைக்கப்பட்டால் அதை வரவேற்கிறோம். ஆனால், அந்தக் குழுவில் ஒரு தரப்பாக தேர்தல் ஆணையம் இருக்காது. அறிவிக்கப்படும் இலவசங்களை ஒரு தரப்பு அர்த்தமற்றதாக கருதும், ஆனால் அது மற்றொரு சாரருக்கு அவசியமானதாக இருக்கும். இலவசங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தால், அதை வைத்து அரசியல் செய்து கட்சிகள் பயனடைய முற்படும்" என்று தெரிவித்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்