பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் சார்பில் 8-வது முறையாக பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களை பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 21 மாதங்கள் ஆட்சிக்குப் பிறகு பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் நேற்று முன்தினம் முறித்தார். அன்றைய தினமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ (எம்.எல்.) உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். அடுத்த சில மணி நேரத்தில் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் 8-வது முறையாக பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றதும் நிதிஷின் காலை தொட்டு வணங்கினார்.
உடல்நலக் குறைவால் டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் லாலு பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவரது மனைவி ரப்ரி தேவி, மூத்த மகன் தேஜ் பிரதாப் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் கூறும்போது, “பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நபர், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுகிறது” என்றார். பிரதமர் மோடியை மறைமுகமாக சுட்டிக் காட்டி முதல்வர் நிதிஷ் குமார் விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “மாநில கட்சிகளை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது. முதல்வர் நிதிஷ் குமார் சரியான முடிவு எடுத்துள்ளார். புதிய ஆட்சியில் வேலைவாய்ப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த ஒரு மாதத்தில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
அமைச்சரவை விரிவாக்கம்
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய கூட்டணி அரசில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ (எம்.எல்.) உட்பட 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைச்சர் பதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 20, ஐக்கிய ஐனதா தளத்துக்கு 13, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
பிஹார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று ஆளும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. நிதிஷ் அரசுக்கு 164 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆர்ப்பாட்டம்
இதனிடையே, மக்கள் தீர்ப்புக்கு நிதிஷ் துரோகம் செய்துவிட்டதாக கூறி, பிஹார் முழுவதும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் பாட்னாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், சுஷில் மோடி, மங்கள் பாண்டே, தர்கிஷ் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிஹார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறும்போது, “தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்று இருப்பதால் மீண்டும் ஊழல் தலைதூக்கும். பிஹார் வளர்ச்சி திட்டப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும்” என்றார்.
சுஷில் மோடி கூறும்போது, “கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவே மக்கள் வாக்களித்தனர். நிதிஷ் குமாருக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. புதிய ஆட்சியில் தேஜஸ்வி யாதவ்தான் உண்மையான முதல்வர். நிதிஷ் பார்வையாளர் மட்டுமே. புதிய கூட்டணி அரசு, ஆட்சி காலத்தை நிறைவு செய்யாது” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago