பிஹாரில் பாஜகவின் கடைசி முயற்சியும் தோல்வி: ‘அசராத’ நிதிஷின் அடுத்தகட்ட ‘மெகா’ நகர்வு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பாஜக எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் தொடர்ச்சியாக லாலுவின் ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் பிஹாரில் மெகா கூட்டணி ஆட்சி அமைகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய 'நிதி ஆயோக்' கூட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார். ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் இந்தப் புறக்கணிப்பின் மூலமாக பிஹார் அரசியலில் சூடு பறக்கத் தொடங்கியது.

இதனால், பிஹாரில் உருவான ஆட்சி மாற்ற சுழலை மாற்றும் நடவடிக்கையாக கடைசி முயற்சியாக டெல்லி மற்றும் பாட்னாவில் பல அதிரடி நடவடிக்கைகளை பாஜக எடுத்தது. இதன் ஒருபகுதியாக பிஹாரின் முடக்கப்பட்ட மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத்தும், ஷா நவாஸ் உசைனும் திங்கள்கிழமை டெல்லிக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், முதல்வர் நிதிஷ் குமாரை கூட்டணியில் தக்க வைக்க பாஜக வியூகம் அமைத்தது. நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த பிஹாரின் மூத்த தலைவர்கள் நேரில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பிஹாரின் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், பாஜகவின் மாநிலத் தலைவர் டாக்டர். சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் பொதுச் செயலாளர் சஞ்சீவ் சவுரஸியா எம்எல்ஏ மற்றும் மருத்துவ நலத் துறை அமைச்சர் மங்கள்பாண்டே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களின் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் நிதிஷ் குமார் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், செவ்வாய்க்கிழமை நிதிஷ் குமாருடன் போனில் பேசியதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், மத்திய அமைச்சர் அமித் ஷா பல மாற்றங்களைச் செய்ய தானாகவே முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கிய எதிரியாகக் கருதப்படும் சபாநாயகர் விஜய்குமார் சின்ஹாவையும் கட்சியிலிருந்து நீக்க தயாரானதானதாகவும் தெரிகிறது.

இதனிடையே, பிஹாரின் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அஸ்வின் சவுபே, ‘என்டிஏ அரசை பிஹாரில் தக்க வைக்க அனைத்தையும் தியாகம் செய்யத் தயார்’ என அறிக்கைவிடுத்திருந்தார். இதற்கும் முதல்வர் நிதிஷ் குமார் அசரவில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல்வரின் அரசு குடியிருப்பில் நடைபெற்ற ஜேடியுவினர் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார் தமது கட்சியை ஒழித்துக்கட்ட பாஜக சதி செய்ததாகக் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து மாலை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அடுத்து மெகா கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் அளித்தார்.

இதற்காக, மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், கூட்டணியின் மற்ற உறுப்பினர்களான காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் நிதிஷ் ஆட்சிக்கு ஆதரவளித்து கடிதம் அளித்தனர்.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்துள்ள நிதிஷ் குமார் 161 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ளார். புதிய அரசில் நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருப்பார் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

எம்எல்ஏக்களின் எண்ணிக்கை: பிஹாரின் 243 மொத்த தொகுதிகளில் கட்சிகளின் தற்போதையை நிலை: ஆர்ஜேடி-79, பாஜக-77, ஜேடியு-45, காங்கிரஸ்-19, இடதுசாரிகள்-16, ஹிந்துஸ்தான் அவாமி சோர்ச்சா-4, ஏஐஎம்ஐஎம்-1, சுயேச்சை-1. ஒரு தொகுதி காலியாக உள்ளது.

பின்னணி என்ன? - கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால், நிதிஷ் குமாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது. இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் போராட்டம் நடந்தபோது மத்திய அரசை, நிதிஷ் கட்சியினர் விமர்சித்தனர்.

பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழா அண்மையில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பான மலரில் முதல்வர் நிதிஷ் குமார் படம் இடம்பெறவில்லை.

கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்குமாறு பாஜக விடுத்த அழைப்பையும் நிதிஷ் குமார் நிராகரித்தார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற விழாவிலும் நிதிஷ் பங்கேற்கவில்லை.

இதனிடையே, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்மைக்காலமாக நிதிஷ் குமாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இரு கட்சிகளிடையே மீண்டும் நெருக்கம் அதிகரித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்